Published : 30 Apr 2014 08:45 AM
Last Updated : 30 Apr 2014 08:45 AM

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு: தேர்தல் அலுவலர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக புகார்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மார்ச் 16-ம் தேதி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் தொகுதி அதிமுக பொறுப்பாளரும் செய்தி மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசுகையில், “தேர்தல் ஆணையம் வழக்கு போடும் என கட்சியினர் பயந்துவிட வேண்டாம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் 40 நாளைக்குத்தான். அதன்பின் நம்முடைய ஆட்சிதான் நடக்கப் போகிறது. எனவே அப்போது நம்மீது வழக்கு போடும் அதிகாரிகளைப் பார்த்துக் கொள்ளலாம். அதன்பின் அவர்கள் தமிழகத்தில் எங்கு செல்வார்கள் என அவர்களுக்கே தெரியாது. எனவே உங்கள் மீது, எங்கு வழக்கு போட்டாலும் உடனே எனக்குச் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்நிலை யில் அமைச்சரின் மிரட்டல் பேச்சு குறித்து திருமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், திங்கள்கிழமை இரவு திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது 189, 505 (1பி), (2பி) ஆகிய பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிக்காக இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், அரசியல் கட்சிகளின் அனைத்து கூட்டங்களும் தேர்தல் அதிகாரிகளால் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை தற்போது ஆய்வு செய்து, விதிமீறல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்து வருகிறோம். அமைச்சரின் சர்ச்சை பேச்சு குறித்தும் புகார் எழுந்ததால் அதனையும் முழுமையாக ஆய்வு செய்து, தற்போது வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x