Published : 01 Jul 2023 04:18 AM
Last Updated : 01 Jul 2023 04:18 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்துக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 30) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை 9 மணிக்கே விவசாயிகள் கூட்டத்துக்கு வந்தனர். தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்களும் வந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் வராததால் கூட்டம் தொடங்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், அங்கிருந்த அலுவலர்களிடம் வெளிநடப்பு செய்யப்போவதாக தெரிவித்தனர். இதையடுத்து பகல் 11.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மை இணை இயக்குநர் தனபால் உள்ளிட்டோர் கூட்டரங்குக்கு வந்தனர்.
வேளாண் உற்பத்தி மற்றும் குறைதீர்க்கூட்டம் நடந்ததால் தாமதமாகிவிட்டதாக கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இல்லாமல் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டுமென தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு சென்றதாக கூறி, விவசாயிகளை அதிகாரிகள் சமரசப்படுத்தினர். அதைத்தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் கூட்டத்துக்கு வந்தார்.
பின்னர் விவசாயிகள் பேசியதாவது: வட்ட அளவில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மூலம் குறுவை சாகுபடி நெல் மூடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
தாமதமின்றி விவசாய மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மேலும் மின் கணக்கெடுப்பை சரியாக நடத்தாததால், மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கின்றனர். இதனால் பழைய முறைபடி வீடுகளில் மின் கணக்கீடு அட்டை வைக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக கண்மாய், வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும். சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும். கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து புதிதாக கொண்டு வந்துள்ள தமிழக அரசின் நில கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக அனைத்து விவசாயிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT