Published : 30 Jun 2023 06:19 PM
Last Updated : 30 Jun 2023 06:19 PM
கரூர்: கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கல்குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில் இல்லை. புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களின் ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராத நடவடிக்கைக்காக கோட்டாட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் குத்தகை நடப்பில் உள்ள கல்குவாரிகளில் விதி மீறல்கள் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கோட்டாட்சியர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து இதுவரை 42 குவாரிகளில் கூட்டுபுலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்க கோட்டாட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 12 குவாரிகளுக்கு ரூ.44,65,28,357 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள சிவாயத்தில் உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ எம்.பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரி கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள சிவாயத்தில் உள்ளது. இங்கு விதிகளை மீறி 5,36,250 கன மீட்டர் சாதாரண கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகக் கூறி 12 குவாரிகளில் அதிகபட்சமாக இவரது குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே பகுதியில் உள்ள க.சிலம்பரசன் கல் குவாரியில் விதிகளை மீறி 1,96,289 கன மீட்டர் சாதாரண கற்கள் வெட்டி எடுத்தாகக்கூறி ரூ.8,61,71,621, பவித்ரத்தில் உள்ள பாலா ப்ளூமெட்டலில் விதிகளை மீறி 1,47,200 கன மீட்டர் சாதாரண கற்களை வெட்டி எடுத்ததாகக்கூறி ரூ.6,46,21,076, முன்னூர் விஆர்ஜி ப்ளூமெட்டல்ஸில் விதிகளை மீறி 33,960 கன மீட்டர் கிராவல் மற்றும் 2,59,650 கன மீட்டர் சாதாரண கற்கள் வெட்டி எடுத்தாகக்கூறி ரூ.2,06,60,988, புன்னத்தில் உள்ள விஎஸ்டி ப்ளூ மெட்டல்ஸில் விதிகளை மீறி 5,070 கன மீட்டர் கிராவல் மற்றும் 28,719 கன மீட்டர் சாதாரண கற்கள் வெட்டி எடுத்தாகக்கூறி ரூ.1.35,82,390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடந்தை பொன்சங்கர் பில்டிங் மெட்டீரியல்ஸ் சப்ளையர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.86,40,110, தென்னிலையில் சா.கந்தசாமி கல்குவாரிக்கு ரூ.40,87,690, பி.அணைப்பாளையம் ரவி ப்ளூமெட்டல்ஸிற்கு ரூ.38,06,477, புஞ்சைகாளகுறிச்சியில் ரா.பார்த்திபன் கல்குவாரிக்கு ரூ.36,40,493, குப்பம் என்டிசி இன்ப்ரா ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட்டிற்கு ரூ.31,36,984, தென்னிலை சக்தி ப்ளூமெட்டல்ஸிற்கு ரூ.15,80,422, அப்பிபாளையம் சு.விஜயலட்சுமி கல்குவாரிக்கு ரூ.11,85,600 அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூன் 30ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT