Published : 30 Jun 2023 05:46 PM
Last Updated : 30 Jun 2023 05:46 PM

காகிதக் குடுவைகளில் மது வழங்கும் திட்டத்தை அரசு கைவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மது வணிகம் அதிகரிக்க மட்டுமே வழி வகுக்கும் காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளில் 90 மி.லி அளவில் காகிதக் குடுவைகளில் மதுவை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றதாகவும், ஆனால், அதில் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. காகிதக் குடுவைகளில் மது விற்க அரசு தீர்மானித்தால் அது மிக மோசமான முடிவாக இருக்கும்; அது கண்டிக்கத்தக்கது.

காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்வதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. கண்மூடித்தனமாக சாலைகளிலும், தெருக்களிலும், வனப்பகுதிகளிலும் வீசப்படும் மதுப்புட்டிகளால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதாகவும், அதைத் தடுக்கவே காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்யப்பட விருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பாட்டில் மதுவை இருவர் பகிர்ந்து குடிக்கும் போது அதில் நஞ்சு கலக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்க்கவே 90 மிலி குடுவைகளில் மது வணிகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இந்த விளக்கங்கள் விந்தையாக உள்ளன. மது வணிகத்தில் மட்டுமே தமிழக அரசு புதுமைகளை புகுத்துகிறது.

கண்ணாடிகளால் ஆன மதுப்புட்டிகளை குடிகாரர்கள் வனப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் வீசிச் செல்வது தடுக்கப்பட வேண்டிய ஒன்று தான். அதற்கானத் தீர்வு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தானே தவிர, காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்வது அல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து சிந்தித்தால், கண்ணாடிகளால் ஆன மதுப்புட்டிகளை விட காகிதக் குடுவைகள் ஆபத்துக் குறைந்தவை தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், இப்போது விற்பனை செய்யப்படும் அளவுகளிலான மது வகைகள் தொடர்ந்து கண்ணாடிக் குடுவைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ள அரசு, புதிதாக 90 மி.லி. என்ற அளவில் மட்டுமே காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அல்ல... புதுப்புது அளவுகளில் மது வகைகளை அறிமுகம் செய்வது தான் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளையும் எளிதாக வாங்கும் வகையில் குறைந்த விலையிலோ, குறைந்த அளவிலோ விற்கக் கூடாது என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை ஆகும். அதனடிப்படையில் தான் சிகரெட்டுகளை சில்லறையில் விற்பனை செய்தால், மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் எளிதாக அதை வாங்கி புகைப்பார்கள் என்பதால் அதை தடை செய்ய வேண்டும்; பாக்கெட்டுகளில் மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 90 மி.லி. அளவில் காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்வதற்கும் இந்த வாதம் பொருந்தும்.

90 மிலி காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது. அதுமட்டுமின்றி காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அவற்றை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அதனால், அவர்கள் அச்சமின்றி மது அருந்தக் கூடிய நிலை ஏற்படும். காகிதக் குடுவைகளினால் ஆன மது வகைகள் சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஆபத்தும் உள்ளது.

மதுக்குடிப்பகங்களில் 180 மிலி மதுப்புட்டிகளை இருவருக்கு பகிர்ந்து கொடுப்பதால், அதில் நஞ்சு கலக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் முத்துசாமி அவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார். மது குடிப்பகங்களில் மது விற்பனை செய்யப்படுவதே குற்றம். அதை உணர்ந்து கொண்டு குடிப்பகங்களில் மது விற்கப்படுவதை தடுப்பது தான் சிக்கலுக்குத் தீர்வே தவிர, 90 மி.லி அளவில் பிரித்து விற்பது அல்ல.

அமைச்சர் முத்துசாமி அவர்கள் நீண்ட அனுபவம் பெற்றவர். தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகித்தவர். போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது, அத்துறை பணியாளர்களின் நலனுக்காக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களைத் தொடங்கியவர். மதுவிலக்குத்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டவுடன், அவர் தமிழ்நாட்டை மதுவிலக்கை நோக்கி அழைத்துச் செல்வார் என்று நான் நம்பினேன்.

ஆனால், இதற்கு முன் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தானியங்கி மதுப்புட்டி வழங்கும் எந்திரங்களை நிறுவியதைப் போன்று, 90 மிலி மது அறிமுகம் செய்யும் முயற்சியில் முத்துசாமி அவர்களும் ஈடுபட்டு வருகிறார். அவரிடமிருந்து தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது இதை அல்ல.... மதுவிலக்கை மட்டுமே.

தமிழ்நாட்டில் கடந்த 1989, 2002 ஆகிய ஆண்டுகளில் மலிவு விலை மது என்ற பெயரில் 100 மி.லி மது வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களின் எதிர்ப்புக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்ட வரலாறு உண்டு. இப்போது 90 மி.லி மது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டால் பழைய வரலாறு மீண்டும் திரும்பும். அதற்கு வாய்ப்பளிக்காமல் காகிதக் குடுவைகளில் 90 மி.லி மது வகைகளை அறிமுகம் செய்யும் திட்டத்தை தொடக்க நிலையிலேயே அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று அன்புணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x