Published : 30 Jun 2023 04:53 PM
Last Updated : 30 Jun 2023 04:53 PM

அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுக: மார்க்சிஸ்ட் தீர்மானம்

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப் படம்

சென்னை: அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.06.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: "இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் ஆளுநர்கள் அரசியல் ஆயுதமாகவும், ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்த கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருகிறார்.

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்து, பின்னர் நிறுத்தி வைத்திருப்பதாக ராஜ்பவன் அறிக்கைகள் கூறுகின்றன. முதல்வரின் அறிவுரை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தது அரசியல் சாசனத்தை மீறும் செயல்.

தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அரசின் நிலைபாட்டுக்கு முரண்பட்டதாகவும், அரசியல் சாசன அதிகார வரம்பை மீறுவதாகவும் உள்ளது.

எனவே, ஆர்.என்.ரவி அரசியல் சாசன அடிப்படையிலான ஆளுநர் பதவியில் நீடிக்க முற்றிலும் பொருத்தமற்றவர். குடியரசுத் தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குரலெழுப்ப முன்வர வேண்டுமெனவும் சிபிஐ(எம்) கேட்டுக் கொள்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x