Published : 30 Jun 2023 03:50 PM
Last Updated : 30 Jun 2023 03:50 PM

செந்தில் பாலாஜி விவகாரம் | வைரல் ஆகும் முதல்வர் ஸ்டாலினின் பழைய பதிவுகள்!

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி | கோப்புப் படம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தது தொடர்பான பழைய அறிக்கைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதையடுத்து, சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, அமைச்சர் ஒருவரை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தது தொடர்பான பழைய அறிக்கைகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு லஞ்சப் பணத்தை தானே வசூல் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதால், இனியும் அவர் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது! “குட்கா புகழ்” விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகிட வேண்டும்! தன் மீதும் ஊழல் வழக்குகள் இருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், தமிழக ஆளுநர் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்து இருந்தார்.

இதைத் தவிர்த்து, 2018-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என தமிழக ஆளுநர் பொதுமேடையில் குற்றம்சாட்டியிருக்கிறார். இப்போது வாய்திறக்கும் ஆளுநர், கடந்த ஒருவருட காலத்தில் திமுக ஆதாரத்தோடு புகாரளித்தும் ஊழல் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர், இப்படி ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது எவ்வித பலனையும் கொடுக்காது! ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திவரும் முதல்வர் - துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!" என்று தெரிவித்து இருந்தார்.

இது போன்ற கடந்த காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகள் தற்பேது வைரல் ஆகி வருகின்றன.

செந்தில் பாலாஜி விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாடு: இதனிடையே, செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று கூறுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு, முதல்வர் கடிதம் அனுப்ப உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அமைச்சரை சேர்ப்பது மற்றும் நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். இதை தெளிவுபடுத்தி முதல்வர், ஆளுநருக்கு கடிதம் எழுத உள்ளார். தெளிவான விளக்கம் அளித்து முதல்வர் கடிதம் எழுத உள்ளார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர கதியில் ஆளுநர் ஆர்.என். ரவி எடுத்துள்ள முடிவை, தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது.

அமைச்சர்கள் விஷயத்தில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தமிழக அரசின் சார்பில் தெளிவுபடுத்துகிறோம். உச்சநீதிமன்றம் இது குறித்து தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. முதல்வரின் பரிந்துரை இல்லாமல் ஆளுநர் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். முதல்வருக்கு அரசியல் அமைப்பு சட்டம் அளித்த உரிமையை ஆளுநர் மீறி உள்ளார். மீண்டும், மீண்டும் ஆளுநர் பிரச்சனையை உருவாக்குகிறார்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x