Published : 30 Jun 2023 05:57 PM
Last Updated : 30 Jun 2023 05:57 PM
தஞ்சாவூர்: கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே கூட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜி.செந்தில்குமாரி, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் என். உமாமகேஸ்வரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காப்பீட்டுத் தொகை வழங்காத நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து வந்து பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியதாவது:
விவசாய செயற்பாட்டாளர் வி.ஜீவக்குமார்: மேட்டூரில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருவதால், வறட்சி ஏற்படுவதற்கு முன்பு அதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெறுவதற்குக் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே கூட்ட வேண்டும். செங்கிப்பட்டியிலுள்ள உய்யக்கொண்டான், கட்டளை வாய்க்கால்களில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றாலும், மதகுகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: தண்ணீர் திறந்து 18 நாட்களாகியும் கடைமடைக்குத் தண்ணீர் செல்ல வில்லை. குறுவை தொகுப்பு திட்டத்தைப் பெரிய, சிறிய விவசாயி எனப் பாகுபாடு இல்லாமல் செயல்படுத்த வேண்டும், நீர் நிலைகளின் கரைகளைப் பாதுகாக்க கரைக்காவலர்களை நியமிக்க வேண்டும்.
திருவோணம் வீரப்பன்; திருவோணம் பருதியில் தென்னை விவசாயிகள் சாலையில் செல்வதற்குக் கூட அருங்கதையற்றவர்களாகி விட்டனர். எனவே, தேங்காய் பருப்பு ரூ. 120-ம்,குடுமியுடன் ரூ, 130-ம், மேலும் கரும்பு, நெல் பயிர்களுக்கும் முறையான விலையினை மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். பட்டா தொடர்பாக அதிகாரிகளிடம் சென்றால் அலட்சியம் காட்டுவதை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுவாமிமலை சுந்தர.விமலநாதன்: முறைபாசனம் நடைமுறைப்படுத்தும்போது முறையான அறிவிப்பு செய்து விட்டு, அதனை செயல்படுத்த வேண்டும், ஆனால், அதிகாரிகள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி முறைப்பாசன முறை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதனால், அரசுக்கு தான் அவப்பெயராகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், இந்த மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக மத்திய. மாநில அரசுகள் உடனே அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.
மேலும், கர்நாடக மாநிலத்திலிருந்து கடந்த மாதம் மற்றும் இந்த மாதத்திற்கான தண்ணீர் வழங்கி விட்டார்களா என உறுதிப்படுத்த வேண்டும். பயிர் காப்பீட்டிற்கான தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையினையும் வழங்க வேண்டும். திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்குக் காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பருத்தி விலை மிகவும் குறைந்ததால், இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடாத வகையில், துணி ஆலை அதிபர்கள், பருத்தி விவசாயிகளைக் கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
அய்யம்பேட்டை கே.எஸ். முகம்மது இப்ராஹீம்: குறுவை பயிரைக் காப்பாற்ற உடனடியாக 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். கோவிந்தநாட்டுச்சேரி கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியை நிறுத்த வேண்டும். பேராவூரணி வட்டம், மறவன் வயலிலுள்ள பாசனக் குளத்தில் சாலை அமைப்பதை தடுக்க வேண்டும், நெடாரிலுள்ள வெட்டாற்றுப் பாலத்தை சீர் செய்ய வேண்டும்.
பட்டுக்கோட்டை வீரசேனன்: பட்டுக்கோட்டை எம்எல்ஏ சட்டவிரோதமாக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர் மீது டிஎஸ்பி புகாரளிக்கவும், அந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தற்போது நுங்கு விற்பனை நடைபெறுவதால், பனை விதைகள் அதிகமாகக் கிடைக்கும். அதனால் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களைப் பனை விதைகள் விதைப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.
பட்டுக்கோட்டையிலுள்ள தென்னை வளாகத்தில் பல கோடி ரூபாய் செலவில் தென்னையிலிருந்து உப பொருட்கள் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக செயல்படுத்தாவிட்டால், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து, அங்குள்ள கட்டிடங்களை அகற்றி, மீண்டும் அந்த இடத்தில் குளத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வேன்.
தொடர்ந்து, கல்லணை கால்வாயில் தண்ணீரில் சிமெண்ட் கலவை கொட்டிய செய்தி வெளியானது, இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, அண்மையில் இந்து தமிழ் திசை நாளிதழில் சுட்டிக்காட்டிப் பேசினார்.
முன்னதாக கக்கரை சுகுமாறன், தண்ணீர் இல்லாமல் பருத்திச் செடிகள் காய்ந்துள்ளதை சுட்டிக் காட்டும் விதத்தில் தலையில் பருத்தி பஞ்சுகளை தலையில் கட்டிக் கொண்டு மனு அளித்தார். இதேபோல் திருவோணம் பகுதியில் முருங்கை அதிகமாக விளைந்துள்ளதால், தோட்டக்கலைத் துறை மூலம் அதனைக் கொள்முதல் செய்ய என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியருக்கு முருங்கைக்காயை விவசாயிகள் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT