Published : 30 Jun 2023 02:01 PM
Last Updated : 30 Jun 2023 02:01 PM
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், கடிதம் தொடர்பாக, ஆளுநருக்கு, முதல்வர் கடிதம் எழுத உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், "அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு, முதல்வர் கடிதம் அனுப்ப உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அமைச்சரை சேர்ப்பது மற்றும் நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். இதை தெளிவுபடுத்தி முதல்வர், ஆளுநருக்கு கடிதம் எழுத உள்ளார். தெளிவான விளக்கம் அளித்து முதல்வர் கடிதம் எழுத உள்ளார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர கதியில் ஆளுநர் ஆர்.என். ரவி எடுத்துள்ள முடிவை, தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது.
அமைச்சர்கள் விஷயத்தில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தமிழக அரசின் சார்பில் தெளிவுபடுத்துகிறோம். உச்சநீதிமன்றம் இது குறித்து தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. முதல்வரின் பரிந்துரை இல்லாமல் ஆளுநர் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். முதல்வருக்கு அரசியல் அமைப்பு சட்டம் அளித்த உரிமையை ஆளுநர் மீறி உள்ளார். மீண்டும், மீண்டும் ஆளுநர் பிரச்சனையை உருவாக்குகிறார்." இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT