Published : 30 Jun 2023 05:52 AM
Last Updated : 30 Jun 2023 05:52 AM

சென்னை காவல் ஆணையரானார் சந்தீப் ராய் ரத்தோர்: சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்

சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய சட்டம் - ஒழுங்கு போலீஸ் டிஜிபியாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையின் புதிய காவல் ஆணையராக போலீஸ் அகாடமி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். இவர்கள் நியமனத்துக்கான அரசாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது.

சென்னை பெருநகரின் 108-வதுகாவல் ஆணையராக 8.5.2021-ல் சங்கர் ஜிவால் பதவியேற்றார். படிப்படியாக ரவுடி, கட்டப்பஞ்சாயத்து, குழு மோதல் உள்ளிட்டவற்றை இரும்பு கரம் கொண்டுஅடக்கினார். மேலும், காவல்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் புகுத்தினார். பாதுகாப்பு பணிக்கு என ஒரு வரைமுறையை கொண்டு வந்தார்.

சிறப்பு திட்டங்கள் புகுத்தியவர்: அதே நேரத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வாரந்தோறும் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாதம்தோறும் பணியில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து அவருக்கு நட்சத்திர போலீஸ் விருதையும் வழங்கிவந்தார். சிற்பி, அவள், பறவை, காவல் கரங்கள் போன்ற சிறப்புதிட்டங்களையும் செயல்படுத்தினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1990-ம் ஆண்டில் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பொறியியல் பட்டதாரியான அவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குமாவோனி ஆகிய 4 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். 1993-ல் மன்னார்குடி ஏஎஸ்பி, 1995-ல் சேலம் எஸ்பி, 1997-ல் மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், 1999-ல் மதுரை எஸ்பி, 2000-ல் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர், 2004-ல் அதே பிரிவு டிஐஜி, 2006-ல் திருச்சி காவல் ஆணையர், 2008-ல் உளவுத்துறை ஐஜி, அதே ஆண்டு சிறப்பு அதிரடிப்படை ஐஜி, 2019-ல் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படையிலும் பணியாற்றியுள்ளார். அயல்பணியாக டெல்லி சென்று அங்கும் மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தார். சிறந்த பணிக்காக 2007, 2019 ஆகிய இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.

புதிய காவல் ஆணையர்: சென்னையின் 109-வது காவல் ஆணையராக போலீஸ் அகாடமிடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். புதுடெல்லியைச் சேர்ந்த இவர் 1992-ம் ஆண்டில் தமிழக பிரிவு ஐபிஎஸ் ஆக தேர்வானார். எம்ஏ, எம்பில் பட்டப்படிப்பை முடித்திருந்த ரத்தோர், பேரிடர் மேலாண்மையில் பிஎச்டி முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர்.

1996 முதல் 1998 வரையிலான காலக்கட்டத்தில் திண்டுக்கல், கோவையில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். மேலும் மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சிஐஎஸ்எப், தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம், சிறப்பு அதிரடிப்படை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆவடி காவல் ஆணையர் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளார். சிறந்த பணிக்காக குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் உள்பட பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

இன்று பகலில் பதவி ஏற்பு: தமிழ்நாட்டின் புதிய போலீஸ் டிஜிபி.யாக சங்கர் ஜிவால் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சைலேந்திரபாபு விடை பெறுவார். இன்று மாலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சைலேந்திரபாபுக்கு வழி அனுப்பு விழா நடைபெறுகிறது.

முன்னதாக சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரும் இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x