Published : 29 Jun 2023 08:36 PM
Last Updated : 29 Jun 2023 08:36 PM
புதுச்சேரி: கண் சிகிச்சை நிபுணர்களின் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிந்து கண்பார்வை இழப்பைத் தடுத்தல் தொடர்பான கருத்தரங்கு இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மொபைல் போன் வசதியுடன் இயங்கும் கண் பரிசோதனை கருவியை அறிமுகம் செய்து வைத்தார். இதில் சுகாதாரத் துறைச் செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''கேரளா, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் செல்போன் மூலம் இயக்கப்படும் எளிய கருவி மூலம் சர்க்கரை வியாதியானால் ஏற்படும் பார்வை இழப்பை சரி செய்து வருகின்றனர். இந்த முறையை புதுச்சேரியிலும் பயன்படுத்த இருக்கிறோம். கண்பார்வை இழப்பு இல்லாத, ஒளிமயமான புதுச்சேரியை உருவாக்க அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. ஏற்கனவே டிபி இல்லாத புதுச்சேரியை உருவாக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
அண்ணன், தங்கை பிரச்சனைதான்: அப்போது நிர்வாக ரீதியாக தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என முதல்வர் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ''எங்களுக்குள் இருப்பது அண்ணன், தங்கை பிரச்னைதான். முதல்வரோடு இணைந்துதான் செயல்படுகிறேன். என்னைப்பற்றி அவர் சொல்லியிருக்க மாட்டார் என்றுதான் சொல்கிறேன்.
பெஸ்ட் புதுச்சேரி போன்று பாஸ்ட் புதுச்சேரியாக இருக்க வேண்டும். இதற்கு எல்லா கோப்புகளையும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். சில அதிகாரிகளிடம் பிரச்னை இருக்கிறது. நான் பிரச்னையே இல்லை என்று சொல்லமாட்டேன். இதனை தீர்க்க முதல்வரும், நானும் முயற்சி செய்வோம். முதல்வருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினோம். சில அதிகாரிகள் கோப்புகளை தாமதப்படுத்துகிறார்கள், இது விரைவில் சரி செய்யப்படும். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். சில அதிகாரிகள் நாம் நினைக்கிற மாதிரி பணி செய்ய வைக்க முடியும். சில அதிகாரிகள் அவர்களுக்கு அந்த நேரத்தில் சரி என பட்டதை செய்து விடுகிறார்கள். இது பொது வெளியில் தவறாக போய்விடுகிறது.
எல்லா இடங்களிலும் நிர்வாகத்தில் இது போன்ற சுணக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதனை சரி செய்ய வேண்டியது நம்முடைய பொறுப்பு. புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதி என்பதால் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நீதிமன்றமும் சில வழிமுறைகளை கூறியுள்ளது. முற்றிலுமாக இதனை மீற முடியாது. தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வேலைக்கு எடுப்பதில் சட்ட விதிமுறைகள் இருக்கிறது. அதே நேரத்தில் புதிதாக படித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கும் அநீதி இழக்கக் கூடாது. இதையெல்லாம் நடுநிலையோடு பார்த்து செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT