Published : 29 Jun 2023 07:17 PM
Last Updated : 29 Jun 2023 07:17 PM
மதுரை: மதுரையில் ‘மாமன்னன்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் இன்று வெளியானது. மதுரையில் 11 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஏற்கெனவே இப்படத்துக்கு ஓரிரு அமைப்புகளால் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அனைத்து தியேட்டருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் முக்குலத்தோர் எழுச்சி கழகம் நேதாஜி சுபாஷ் சேனை சார்பில், ஒட்டிய சுவரொட்டிகளில் 'தமிழ்நாட்டில் இணக்கமாக இருக்கும் தமிழ் குடிகளுக்கு இடையே திரைப்படம் வாயிலாக சாதிக் கலவரம், வன்முறையை ஏற்படுத்தும் இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் திரையரங்கு களை முற்றுகையிடுவோம்' என எச்சரித்து இருந்தனர்.
இருப்பினும், அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சுமன் என்பவர் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் செல்லூர் கோபுரம் திரையரங்கு முன்பு இன்று காலை திரண்டு கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் திரையரங்கை முற்றுகையிட முயன்றபோது, செல்லூர் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. | வாசிக்க > மாமன்னன் Review: துணிந்து அரசியல் பேசிய படைப்பின் திரைமொழி எப்படி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT