Published : 29 Jun 2023 06:49 PM
Last Updated : 29 Jun 2023 06:49 PM

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் - யார் இவர்?

சங்கர் ஜிவால்

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம் - ஒழுங்கு டிஜிபியாகவும் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறையின் தலைவராக இருக்கும் டிஜிபி சி.சைலேந்திரபாபு வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தற்போது அவர் பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து, புதிதாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 22-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி ( ஊர் காவல் படை தலைவர்), சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்பட 10 பேர் இருந்தனர்.

இவர்களில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. இந்த 3 பேரில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். இதன்படி, தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த சங்கர் ஜிவால்? - உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தராகண்டின் குமாவுனி மொழியில் புலமை பெற்றவர்.

இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் செய்ல் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), பெல் (பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்) நிறுவனங்களில் சிறிது காலம் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

சேலம், மதுரை எஸ்.பி., மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த இவர் பிறகு தமிழகம் வந்து அதிரடிப்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

சிறந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர். சென்னையின் 108-வது காவல் ஆணையராக சங்கர் ஜிவால் 08.05.2021 முதல் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது இவர் தமிழக டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அதன் விவரம்: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமனம் - யார் இவர்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x