Published : 29 Jun 2023 06:15 PM
Last Updated : 29 Jun 2023 06:15 PM
சென்னை: சிதம்பரம் - நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிதம்பரம் - நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவை ஒட்டி, கனக சபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனக சபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனக சபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT