Published : 29 Jun 2023 05:32 PM
Last Updated : 29 Jun 2023 05:32 PM
சென்னை: பூதிநத்தம் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பூதிநத்தம் என்னும் கிராமத்தில் தமிழக அரசு தொல்லியல் துறையால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வகழாய்வில் இதுவரை 17 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு 52-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கடந்த 10.06.2023 அன்று கண்டெடுக்கப்பட்ட கற்கருவியானது C9 என்னும் அகழாய்வு குழியில் சுமார் 36 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்றது.
தற்போது அதே போன்ற மற்றொரு கற்கருவி D9 என்னும் அகழாய்வு குழியில் 28.06.2023 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் முனை மிகவும் மழுங்கியும் உடைந்தும் காணப்படுவதால் இக்கருவியினை கொண்டு மரத்தினை வெட்டவோ அல்லது வேட்டையாடவோ பயன்படுத்தி இருக்கலாம் என கருத முடிகிறது.
மேலும், இக்கற்கால கருவிகள் புதிய கற்காலத்தில் நிலத்தினை உழும் வகையில் ஏர்க்கலப்பையாகவும், வெட்டுவதற்கு கோடரியாகவும் பயன்பட்டிருக்கக்கூடும். இக்கருவி டோலராய்ட் (Doloraid) என்னும் மூலக் கல்லினை கொண்டு செய்யப்பட்டுள்ளது.
பூதிநத்தம் கள ஆய்விலும், அகழாய்விலும் இதுவரை மொத்தமாக 6 புதிய கற்கால கருவிகள் வெவ்வேறு அகழாய்வு குழிகளில் வெவ்வேறு ஆழத்தல் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக புதிய கற்கால கருவிகள் கிடைக்கப் பெறுவதாலும் இதனுடன் சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்களி, வட்ட சில்லுகள், சூது பவள மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணலான உருவங்கள் கிடைக்கப் பெறுவதாலும் இப்பகுதி இடைக்கால வரலாற்று தொடக்க காலத்தினை சார்ந்தாக கருதலாம்.
மேலும் இடைக்காலத்திலும் புதிய கற்கால கருவியானது தொடர்ச்சியாக இப்பகுதியில் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் எனவும் கருத முடிகின்றது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment