Published : 29 Jun 2023 05:18 PM
Last Updated : 29 Jun 2023 05:18 PM

சென்னை மாநகர பேருந்து சேவை எப்படி உள்ளது? - பொதுமக்களின் கருத்துகளை கேட்க முடிவு

எம்டிசி பேருந்துகள்

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் செயல்பாடு மற்றும் தரம் குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. சென்னையில் 625 வழித்தடங்களில் 3436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 29.50 லட்சம் மக்கள் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா திட்ட நிதியின் கீழ் தற்போது 2,500 பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு மற்று அவசர அழைப்பு பட்டங்களுடன் கூடிய வாகன கண்காணிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து சேவை தொடர்பாக பயணிகளிடம் கருத்துகளை பெற்று பேருந்துகளின் இயக்கம் மற்றும் சேவை தரத்தை அதிகரிக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் பேருந்துகளின் தூய்மை, பயண வசதி, பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தனிநபர் பாதுகாப்பு, சரியான நேரத்திற்கு பேருந்துகள் வருகை, பேருந்துச் சேவையின் செயல்திறன் உள்ளிட்டவை குறித்த கருத்துகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து விதமான பயணிகள் என மொத்தம் 2,310 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

குறைந்த நடுத்தர மற்றும் அதிக வருவாய் கொண்ட பயணிகளிடம் மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு மூலமாக கிடைக்கும் பயணிகளின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு பேருந்துகளின் இயக்கத்தில் மாற்றம் செய்யவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x