Published : 29 Jun 2023 02:08 PM
Last Updated : 29 Jun 2023 02:08 PM
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே மாநில தலைமைச் செயலராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை (ஜூன் 30) ஒய்வு பெறுகிறார்.
அவர் ஓய்வுபெறும் சூழலில், புதிய தலைமைச் செயலர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுவார்.
யார் இவர்? - ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம் துணை ஆட்சியராக (பயிற்சி) தன் பணியை தொடங்கினார்.
1991-ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை கோவில்பட்டி துணை ஆட்சியராக சிவ்தாஸ் மீனா பணியாற்றியுள்ளார் 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையில் வேலூர், கோவை மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர் அந்தஸ்தில் ஊரக வளர்ச்சி, வருவாய் நிர்வாக செயலாளராக பணியாற்றியுள்ளார்
1998ம் ஆண்டு போக்குவரத்துத்துறை நிர்வாக இயக்குனராக இருந்த சிவ்தாஸ் மீனா நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் ஆட்சியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 2001ம் ஆண்டு பதிவுத்துறையின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டார்
சென்னை குடிநீர் வாரியத்தின் இயக்குநர், உணவுத் துறை, உயர்கல்வித் துறை, வணிக வரித் துறை இணை ஆணையராகவும் சிவ்தாஸ் மீனா பணியாற்றியுள்ளார்.
2015-ம் ஆண்டு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் முதன்மைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டார். 2017-ம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட சிவ்தாஸ் மீனா, வீட்டு வசதித் துறை கூடுதல் செயலாளராகவும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தமிழகப் பணிக்கு அழைத்துவரப்பட்ட சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் முந்தைய திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது சிவ்தாஸ் மீனா அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அதிகாரி என்பதும், அதிமுக ஆட்சி அமைந்தபோது சிவ்தாஸ் மீனா அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT