Last Updated : 29 Jun, 2023 02:58 PM

 

Published : 29 Jun 2023 02:58 PM
Last Updated : 29 Jun 2023 02:58 PM

ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் ‘ஸ்ட்ரெச்சர்’ இருக்கு... உதவியாளர் இல்லை: நோயாளிகள் பரிதவிப்பு

உதவியாளர்கள் இல்லாததால், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை, ‘ஸ்ட்ரெச்சரில்’ படுக்க வைத்து அழைத்துச் செல்லும் உறவினர்கள்.

ஓசூர்: ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்ல ‘ஸ்ட்ரெச்சர்’ வசதியிருந்தும், உதவியாளர்கள் இல்லாததால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பரிதவிக்கும் நிலையுள்ளது. ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற 325 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு 56 செவிலியர்கள், 26 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற தினசரி ஓசூர் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விபத்து, மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை ஆம்புலன்ஸ்சில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ‘ஸ்ட்ரெச்சர்’ வசதி உள்ளது. ஆனால், நோயாளிகளை அழைத்துச் செல்ல உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை.

இதனால், அவசர சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் பரிசோதனை செய்ய நோயாளிகளை அவர்களது உறவினர்களே ‘ஸ்ட்ரெச்சரில்’ அழைத்துச் செல்லும் நிலையுள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரியப் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே, கூடுதல் உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர் கோபுர மின் விளக்கு பழுதால், இரவில் இருளில் மூழ்கும் ஓசூர்
அரசு தலைமை மருத்துவமனை வளாகம்.

இதுதொடர்பாக மருத்துவ ஊழியர்கள் கூறியதாவது: ஓசூர் மருத்துவமனைக்குத் தினசரி கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெற 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நடக்க முடியாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, ‘ஸ்ட்ரெச்சரில்’ படுக்க வைத்து அழைத்துச் செல்ல உதவியாளர்கள் இல்லை. இதனால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, முன் அனுபவம் இல்லாத அவர்களது உறவினர்கள் பாதுகாப்பற்ற முறையில் அழைத்துச் செல்லும் நிலையுள்ளது.

அதேபோல, மருத்துவமனை வளாகத்தில் உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி 2 மாதங்களைக் கடந்தும், இதுவரை புதிய மின் விளக்குப் பொருத்த நடவடிக்கை இல்லை. இதனால், இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கும் நிலையுள்ளது. கண்காணிப்புக் கேமராவும் செயல்படாமல் உள்ளது. நோயாளிகளின் நலன் கருதி உதவியாளர்கள் நியமனம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x