Published : 29 Jun 2023 05:36 AM
Last Updated : 29 Jun 2023 05:36 AM

‘எளியோரின் பசி தீர்த்துக் கொண்டாடும் தியாகத் திருநாள்’ - ஆளுநர், முதல்வர், தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துகள். பிரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மை உணர்வை வலுப்படுத்துவதன் மூலம், ஒரு குடும்ப மாக அமைதியான, இணக்கமான இந்தியாவை உருவாக்குவோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஏழை - எளியோரின் பசி தீர்த்துக்கொண்டாடும் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை. இந்நாளில் ‘ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள், பிறகு நண்பர்கள் அடுத்துதான் தங்களுக்கு’ என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் அன்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக்கருணை காட்டிட என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவ வேண்டும். விட்டுக்கொடுத்தலும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்க வேண்டும், அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், பெருகிட வேண்டும். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்து.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு தடைக்கற்களாக விளங்குகின்ற ஆணவம், அநீதி, துரோகம்,சூழ்ச்சி ஆகியவை ஒழிந்து நல்லஎண்ணங்களும், மனிதநேயமும் தழைத்தோங்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் அனைவரும்ஒற்றுமையுடன் செயல்பட உறுதியேற்போம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உலக முஸ்லீம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம்பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இஸ்லாமியர்களின் தியாகத்தைப் போற்றும் திருநாளான பக்ரீத்திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்து.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மதக் கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இஸ்லாமிய மார்க்கம், சமூகஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் மக்களிடத்தில் உருவாக்கும் சிறந்த மார்க்கமாகும். இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும் நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இஸ்லாமியர்கள் ஹஜ்பெருநாளான பக்ரீத் பண்டிகையைகொண்டாடி, நபிகள் நாயகத்தின்தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்பயணித்த நல்வழியில் பயணிக்க, இறைவன் துணை நிற்க வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: இல்லாதோருக்கு இயன்றதைக் கொடுங்கள் என வலியுறுத்தும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சமக தலைவர் சரத்குமார், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து,சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை, சு.திருநாவுக்கரசர் எம்.பி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் மாநிலதலைவர் முனிருத்தீன் ஷெரீப், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x