Published : 29 Jun 2023 06:09 AM
Last Updated : 29 Jun 2023 06:09 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - இந்து சமய அறநிலையத் துறை மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பழையபடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். (அடுத்த படம்) தேவராம், திருவாசகம் பாடியபடி சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய வந்த தெய்வத் தமிழ் பேரவையினர்.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பழையபடி வழிபட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் நேற்று அவ்வழியே சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே கனகசபையில் நடந்த தகராறில் தீட்சிதர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை இந்து சமய அறநிலையத் துறையினர் மறுத்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத திருமஞ்சன தரிசனத்தையொட்டி கடந்த 24, 25, 26, 27 ஆகிய 4 நாட்கள் கனகசபையில் (சிற்றம்பல மேடையில்) ஏறி வழிபட கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து, அதுதொடர்பான அறிவிப்பு பதாகையை வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு எழுந்த சூழலில்,கடந்த 24-ம் தேதி இந்து சமய அறநிலைத்துறையினர் காவல்துறையினர் உதவியோடு பதாகையை அகற்ற சென்றபோது, தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், கடந்த 26-ம் தேதி மாலை போலீஸ் பாதுகாப்புடன் அந்த பதாகை அகற்றப்பட்டது. பதாகையை அகற்றிய பிறகும் கனகசபையில் ஏறி வழிபட அனுமதி தரப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் பிரமுகர் ஜெமினி ராதா உள்ளிட்டோர் கனகசபையில் ஏறி வழிபட முற்பட, அங்கு வந்த பாஜகவினர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கிடையே அங்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் காவல்துறையினருடன் ஏறி வழிபட முயன்றனர். அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கனகசபையில் தரிசனம்: இந்நிலையில் நேற்று காலை 7 மணி முதல் கனகசபையில் பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபாடு நடத்தினர். தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி தரிசனம் செய்தனர்.

ஆகம விதி: இவ்விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன் மற்றும் தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோயிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனகசபையில் ஏறியுள்ளனர். இது ஆகம விதிக்கு எதிரானது. எனவே இனிவரும் காலங்களில் கோயிலுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நேற்று முன்தினம் கனகசபையில் பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதரை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தள்ளி விட்டு, அவரது உடைகள் ஈரமாகி பூணூல் அறுக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

அறநிலையத் துறை விளக்கம்: இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், “அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர். அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர்.

காவல் துறையினர் மற்றும் அறநிலையத்துறையினரின் சுண்டு விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது. அவரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன.

மேலும், ‘கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாது’ என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி, அந்த தீட்சிதர் உடுத்தியிருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x