Published : 29 Jun 2023 11:19 AM
Last Updated : 29 Jun 2023 11:19 AM
மதுரை: தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து தொழில்துறை, மருத்துவத் துறையில் வேகமாக வளர்ச்சியடையும் நகராக மதுரை உள்ளது. தென் மாவட்டங்களையும், வடமாவட்டங்களையும் இணைக்கும் மையமாக மதுரை திகழ்கிறது.
-மதுரை - நெல்லை நான்குவழிச் சாலையில் பாண்டிகோவில் வண்டியூர், சிந்தாமணி, வலையங்குளம், கப்பலூர், சாத்தூர், கயத்தார் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் (டோல்கேட்டுகள்) உள்ளன. ஒரே சாலையில் இத்தனை சுங்கச் சாவடிகளா? என்ற அடிப்படையில் பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்துகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை நிர்ணயித்த 60 கி.மீ., தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிமுறை பகிரங்கமாகவே மீறப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மக்கள், வாகன ஓட்டுநர்கள் சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கடந்த பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தும் இந்த சுங்கச்சாவடி அகற்றப்படாமலே அதன் கட்டணம் அதிகரித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்த புது நத்தம் நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வேம்பரளியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை புதிதாக சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணம் வாகன ஓட்டுநர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நான்கு வழிச்சாலை, நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரை 63 கி.மீ.,செல்கிறது. இந்தச் சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் தமிழகத்திலே மிக நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 முதல் வேம்பரளி சுங்கச்சாவடி செயல்பட இருந்தநிலையில் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி சுங்கச்சாவடியில் ஒரு முறை செல்லும் கார்களுக்கு ரூ.180, 24 மணி நேரத்துக்குள் திரும்பினால் ரூ.270 என்றும் இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பேருந்துகளுக்கு ரூ.290, 24 மணி நேரத்துக்குள் திரும்பினால் ரூ.435 என்றும் பேருந்து அல்லது டிரக்குகளுக்கு ரூ.605, 24 மணி நேரத்துக்குள் திரும்பினால் ரூ.905 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.660, 24 மணி நேரத்துக்குள் திரும்பினால் ரூ.990, பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றிச் செல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.950 , 24 மணி நேரத்துக்குள் திரும்பினால் ரூ.1,425 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு கொண்ட வாகனம் (7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்டவை) ஒரு முறை செல்வதற்கு ரூ.1,155, 24 மணி நேரத்துக்குள் திரும்பினால் ரூ.1,730 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக உபயோகம் அல்லது உள்ளூர் வாகனங்களுக்கு (20 கி.மீ., தொலைவுக்குள்) மாதாந்திர பாஸ் திட்டம் அமல்படுத்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சுங்கக் கட்டணம் தமிழகத்திலே மிக அதிகமாக இருப்பதாக சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பியதால் தற்காலிகமாக இந்த சுங்கக் கட்டணம் அமல்படுத்துவதை நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுங்கக் கட்டணம் நடைமுறைக்கு வந்தால் வாகன ஓட்டிகள், நத்தம் சாலையைப் பயன்படுத்தாமல் தவிர்க்கும் நிலை ஏற்படும்.
மதுரை தல்லாகுளத்தில் இருந்து துவரங்குறிச்சிக்கு செல்லும் தொலைவு, மதுரையில் இருந்து மேலூர், கொட்டாம்பட்டி பைபாஸ் சாலையை பிடித்து துவரங்குறிச்சி செல்வதைக் காட்டிலும் 20 கி.மீ, குறைவு. மேலும், மதுரை-நத்தம்-துவரங்குறிச்சி சாலை, போக்குவரத்து நெரிசல், வளைவுகள் இல்லாமல் உள்ளன. ஆனால், மேலூர் கொட்டம்பட்டி வழியாக துவரங்குறிச்சி செல்லக்கூடிய சாலை வளைவுகள், நெரிசல் மிகுந்துள்ளது. அதனால், இந்தச் சாலையில் செல்லக்கூடியோருக்குப் பயண தூரமும், நேரமும் அதிகமாக உள்ளது.
தற்போது மதுரையில் இருந்து திருச்சி, சென்னைக்கு செல்லக் கூடியவர்கள், புது நத்தம் சாலை வழியாக செல்லத்தொடங்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள வேம்பரளி சுங்கக் கட்டணம், வாகன ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சுங்கச்சாவடி செயல்படத் தொடங்கினால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சுங்கக் கட்டணத்துக்குப் பயந்து புது நத்தம் சாலையை தவிர்த்து பழையபடி மேலூர் கொட்டாம்பட்டி வழியாக திருச்சி, சென்னை செல்வார்கள். அதனால், இந்தச் சாலையில் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசலும், வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயண தூரம் அதிகமாக இருக்கும். புதுநத்தம் சாலையும், 7.5 கி.மீ., பறக்கும் பாலமும் ரூ.650 கோடியில் அமைத்தும் மக்களுக்குப் பயனில்லாத நிலை ஏற்படும்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘விரைவில் திட்டமிட்ட கட்டணத்துடன் வேம்பரளி சுங்கச்சாவடி செயல்படும்,’ என்றார்.
மேம்பாலத்துக்காக கூடுதல் கட்டணமா?: நத்தம் மேம்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முதலீடு செய்த பணத்தை ஈடுகட்டவே, ‘வேம்பரளி சுங்கச்சாவடி கட்டணம் இந்தளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில் கூறுகையில், ‘‘நத்தம் சாலையில் செல்வோர் அனைவருமே மேம்பாலத்தில் செல்லமாட்டார்கள். அதனால், இந்த சுங்கக் கட்டணம் எந்த விதத்தில் நியாயம்? தொடக்கத்திலேயே மக்கள் பிரதிநிதிகள் சுங்கக் கட்டண விவகாரத்தில் தலையிட்டு வேம்பரளி சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT