Published : 29 Jun 2023 12:22 AM
Last Updated : 29 Jun 2023 12:22 AM
புதுச்சேரி: தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பிறகு, சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை, பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற இடர்பாடுகளைத் தவிர்க்க தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1989-ல் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. நாட்டில் நிகழும் பிரசவங்களை கணக்கில் கொண்டால் தாய்ப்பால் வங்கிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும் கடந்த சில வருடங்களாக தாய்ப்பால் வங்கியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 100 தாய்ப்பால் வங்கிகள் இந்தியாவில் செயல்படுகின்றன.
அந்த வகையில் ஜிப்மர் மருத்துவமனையில் அமுதம் தாய்ப்பால் மையம் என்ற பெயரில் தாய்ப்பால் வங்கி 2016 ஜூலை 13 முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இங்கு 2,220 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் வரை பயனடைந்துள்ளனர். ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் முதல் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலேயே இந்த தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது.
தாய்ப்பால் வங்கி ஆரம்பித்தபோது, ஒரு நாளைக்கு 400 மில்லி தாய்ப்பால் சேகரிக்கப்பட்டது. தற்பொழுது ஒரு நாளைக்கு 1000 மில்லிவரை சேகரிக்கப்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் 20 குழந்தைகள், குறிப்பாக குறை மாதக் குழந்தைகள், எடை கொண்ட பச்சிளம் குழந்தைகள் இந்த தாய்ப்பால் வங்கியிலிருந்து அதிகம் பயன்பெறுகிறார்கள்.
இது குறித்து ஜிப்மர் பச்சிளம் குழந்தைகள் நலத்துறையின் தலைவர் நிவேதிதா மோண்டல் கூறும்போது, "உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தால், தாய் தன் குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத பொழுது, அந்த தாயின் தாய்ப்பாலையே, கை அல்லது கருவி கொண்டு பீச்சி எடுத்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இதுவும் முடியாதபோது, தாய்ப்பால் வங்கியிலிருந்து பெறப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பால் வங்கியில் தாய்மார்களை நன்கு பரிசோதித்த பிறகே அவர்களிடம் இருந்து தாய்ப்பால் தானமாக பெறப்படுகிறது. தாய்ப்பாலை தகுந்த தட்பவெப்ப நிலையில் பதப்படுத்தி வைத்து, பிறகு சுத்திகரிப்பு செய்து, கிருமித்தாக்கம் உள்ளதா என மீண்டும் பரிசோதித்து, அதன் பிறகே தேவைப்படும் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.
தாய்ப்பால் வங்கி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும். தாய்மார்களும் தாய்ப்பால் தானம் கொடுப்பதின் நன்மைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு, சுயமாக தாய்ப்பால் தானம் தர முன்வர வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம். தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு கொடுத்தது போக எஞ்சிய தாய்ப்பால் வங்கிக்கு வழங்குவதால், தானம் செய்யும் தாய்மார்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. மாறாக, அவர்களுக்கு பால் சுரப்பது அதிகரிக்கும்.
தானம் செய்யும் தாய்ப்பாலால் குறைந்த எடை கொண்ட பச்சிளம் குழந்தைகள், தாயை இழந்த குழந்தைகள் அல்லது தாயிடமிருந்து தற்காலிகமாக பால் கிடைக்காத குழந்தைகள் பயனடைவார்கள். ஜிப்மர் அமுதம் தாய்ப்பால் மையம் 7 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
துறையின் பேராசிரியர் ஆதிசிவம் கூறுகையில், ‘‘ஜிப்மர் அமுதம் தாய்ப்பால் மையத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 2200 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் வரை பயனடைந்துள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT