Published : 28 Jun 2023 06:05 PM
Last Updated : 28 Jun 2023 06:05 PM

குத்தகைக்கு எடுக்கப்பட்ட கோயில் நிலத்துக்கான வாடகையை இரு வாரங்களில் செலுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்துக்கான வாடகையை இரு வாரங்களில் செலுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கோயில் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2020-ம் ஆண்டு ஜூலை முதல், மாதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வாடகையாக கணக்கிட்டு ஒரு மாதத்தில் கோயில் நிர்வாகத்துக்கு செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும், வாடகை பாக்கி 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை கோயில் நிர்வாகத்துக்கு வழங்கக் கோரியும், கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும் கோயில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, இரண்டு வாரங்களில் வாடகையை கோயில் நிர்வாகத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x