Last Updated : 28 Jun, 2023 05:58 PM

1  

Published : 28 Jun 2023 05:58 PM
Last Updated : 28 Jun 2023 05:58 PM

அரசியல் அழுத்தம் இல்லாததால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சிவகங்கை

சிவகங்கை: அரசியல் அழுத்தம் இல்லாததால் சிவகங்கை தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அப்போதே செவிலியர் கல்லூரி தொடங்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டன. ஆனால் இதுவரை கல்லூரியைத் தொடங்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகப் பிரிவு (நெப்ராலஜி) மருத்துவர், தலைக்காய சிகிச்சைப் பிரிவுக்கான நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லை.

சிவகங்கை அருகே அரசனூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக இலுப்பக்குடி வருவாய் கிராமத்தில் 605.39 ஏக்கர், கிளாதரி வருவாய் கிராமத்தில் 62 ஏக்கர், அரசனூர் வருவாய் கிராமத்தில் 108.40 ஏக்கர் என 775.79 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை தொழிற்பேட்டையைத் தொடங்கவில்லை.

சிவகங்கை அருகே கோமாளிப்பட்டி கிராபைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்து உபத் தொழில்கள் தொடங்கப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. கடந்த 1964-ம் ஆண்டு சிவகங்கை நகராட்சியானது.

1985-ம் ஆண்டு மாவட்ட தலைநகரானது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே, முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது வரி வருவாய் ரூ. 9.94 கோடியாக உள்ளது. குறிப்பிட்ட தகுதியிருந்தும் தேர்வுநிலை நகராட்சியாக சிவகங்கையை அரசு தரம் உயர்த்தவில்லை. மேலும் நகரை விரிவாக்கம் செய்தால் சிறப்பு நிலை நகராட்சியாகக் கூட தரம் உயர்த்தலாம்.

அதற்கான தீர்மானத்தை நகராட்சி சார்பில் நிறைவேற்றி ,பலமுறை அரசுக்கு அனுப்பியும் பயனில்லை. இதனால் நகரின் வளர்ச்சி பாதிக்கப் படுவதோடு, அரசு ஊழியர்களுக்கு வாடகைப் படியும் குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு சிங்கம்புணரி அருகே சமத்துவபுரம் திறப்பு விழாவின் போது சிவகங்கையில் அரசு மகளிர் காவல் பயிற்சிக் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. சிவகங்கை புறவழிச் சாலை திட்டமும் 10 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. அரசு பொறியியல் கல்லூரியைத் தொடங்குவது, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ஆராய்ச்சி படிப்புகள், அரசு மகளிர் கல்லூரியில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் முதுகலைப் படிப்புகள் தொடங்குவது போன்ற கோரிக்கைகளும் கிடப்பில் உள்ளன.

அரசு ஊழியர் குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்த நிலையில், தங்க முடியாத நிலை உள்ளது. சிவகங்கையில் இருந்து மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லை. காளையார்கோவில் அரசு கலைக் கல்லூரி, காளையார்கோவில் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவது, அங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பது போன்றவை அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளாகவே உள்ளன.

இதனால் சிவகங்கையில் தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகங்கை தொகுதி எம்எல்ஏ செந்தில்நாதன் அதிமுகவைச் சேர்ந்தவராக இருப்பதாலும், அரசியல் அழுத்தம் இல்லாததாலும் இத்தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து செந்தில்நாதன் எம்எல்ஏ கூறுகையில், செவிலியர் கல்லூரி, சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவது, சிவகங்கை புறவழிச்.சாலை, காளையார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி என தொகுதிக்கு தேவையான அனைத்து கோரிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவையில் வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

இது குறித்து சிவகங்கை நகராட்சித் தலைவர் சிஎம்.துரை ஆனந்த் (திமுக) கூறுகையில், சிவகங்கை தெப்பக்குளத்தை சீரமைப்பது, குப்பைக் கிடங்குக்கு 5 ஏக்கர் நிலம், நகராட்சி விரிவாக்கம், தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்துவது, புதிய நகராட்சி அலுவலகம், கலைஞர் நூற்றாண்டு பூங்கா கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x