Published : 28 Jun 2023 04:18 AM
Last Updated : 28 Jun 2023 04:18 AM
சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் தின விழா நேற்று அரசு விழாவாக நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமூக நீதி, சமச்சீர் தொழில் வளர்ச்சியை தனது இரு கண்களாக கொண்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. நாட்டிலேயே முதன்முதலில் குறு, சிறு, நடுத்தர தொழிலுக்கென தனி கொள்கையை கொண்டு வந்தார். தொழில் முனைவோர் எளிதில் தொழில் தொடங்க அனைத்து அடிப்படை வசதிகளுடன் 1970-ம்ஆண்டிலேயே சிட்கோவை தொடங்கினார். இன்று தமிழகத்தின் 37மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் உள்ளன.
கருணாநிதி வழியில், பொருளாதார வளர்ச்சியிலும் சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தொழிற்சாலைக்கான நிலம், கட்டிடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் வரை 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. இத்திட்டத்தின் முதல் 100 பயனாளிகளுக்கு தற்போது ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சியில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. ஓய்வுபெற்ற அதிகாரி சுந்தரதேவன் தலைமையிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில், குறுகிய, நடுத்தர, நீண்ட கால நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம், ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.
தொழில் முனைவோர் 159 வகையான தொழில் உரிமங்களை 27அரசு துறைகளிடம் இருந்து எளிதாகபெற ஒற்றை சாளர போர்ட்டல் 2.0 தளம் தொடங்கப்பட்டு, இதுவரை 20,353 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 17,618 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,903 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
தமிழக கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிப்படுத்தவும் குறுங்குழுமங்களை மேம்படுத்துவது அவசியம். அதேபோல, திண்டிவனத்தில் மருந்து பொருட்கள்பெருங்குழுமம், திருமுடிவாக்கத்தில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம், விண்வெளி, பாதுகாப்பு துறை சார்ந்த பெருங்குழுமம், ஸ்மார்ட் மொபிலிட்டி, மின்வாகனத் துறைசார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் 6 தொழிற்பேட்டைகள்: இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. சென்னை, கோயம்புத்தூரில் வெளியூர், வெளி மாநில பணியாளர்களுக்கு அரசு சார்பில் தங்கும் விடுதிகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து 6,257 புத்தொழில் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் இந்தியா தளத்தில் பதிவு செய்துள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 2 மடங்குக்கும் அதிகம்.அரசின் வேகத்துக்கும், செயல்திறனுக்கும் இதுவே சிறந்த சான்றாகும்.
மதுரை, ஈரோடு, திருநெல்வேலியில் நிறுவப்பட்டதுபோல, இந்த ஆண்டில் சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூரில் வட்டார புத்தொழில் மையம் நிறுவும் பணி நடந்து வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு ரூ.30 கோடியில் இருந்துரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, படிப்பு முடித்தபிறகு பலருக்கும் வேலை கொடுப்பவராக மாற்றக்கூடிய ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்’ அரசால் செயல்படுத்தப்படுகிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கிறது. தொடர்ந்து அவ்வாறே உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறேன்.
கடந்த ஆட்சியில் இத்துறைக்கு ரூ.607.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இது படிப்படியாக அதிகரித்து, தற்போதுரூ.1,505 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு செயல்படுத்தும் 20-க்கும்மேற்பட்ட திட்டங்கள் குறு, சிறு,நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்டவை. இத்திட்டங்கள் முழுமையாக வெற்றி பெற, சங்கங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT