Published : 28 Jun 2023 06:35 AM
Last Updated : 28 Jun 2023 06:35 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 உள்ளிட்ட போட்டி தேர்வு முடிவு எப்போது?

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.

அதன்படி, கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வை தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் வரும் டிசம்பரில் வெளியாகும். அதேபோல, குரூப்-1 பதவிகளில் 95 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிடப்பட்டன. முதன்மை தேர்வு ஆக.10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதுதவிர, 10 வன பயிற்சியாளர், 178 உதவி பிரிவு அலுவலர், 731 கால்நடை உதவி அறுவைசிகிச்சை நிபுணர், 11 மாவட்ட கல்விஅலுவலர், 9 உதவி வன பாதுகாவலர், 27 நூலகர், 121 வேளாண் அலுவலர் மற்றும் குரூப்-3 பிரிவில் வரும் ஒருங்கிணைந்த சிவில் சேவை துறையில் 33, புள்ளியியல் துறையில் 217 பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலையில் வெளியிடப்பட உள்ளன.

இதேபோல, 825 சாலை ஆய்வாளர் பணியிடங்கள், 1,083 ஒருங்கிணைந்த பொறியியல் துறை பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும். மீன்வளத் துறையில் 66 ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜூலை 11, 12-ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x