Published : 28 Jun 2023 06:41 AM
Last Updated : 28 Jun 2023 06:41 AM

செந்தில் பாலாஜியை ஆதாரமின்றி கைது செய்திருப்பதாக நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: செந்தில் பாலாஜியை ஆதாரமின்றி சட்டவிரோதமாகக் கைது செய்திருப்பதாக நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா பரபரப்பு வாதத்தை முன்வைத்தார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்தஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அமலாக்கத் துறைதரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும், மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, அமித்ஆனந்த் திவாரி, என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது இருதரப்பிலும் நடந்த பரபரப்பு வாதம் வருமாறு:

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: கைதுக்கான காரணங்களை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட கைது மெமோவில் செந்தில்பாலாஜி கையெழுத்திட மறுத்தார்எனக் கூறுவதற்கு எந்த ஆதாரமும்இல்லை. இதன்மூலம் அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டுதான் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க, அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் முதலில் அவர் சட்டவிரோதமாக அமலாக்கத் துறையின் காவலில் இல்லை. தற்போது அவர் நீதி மன்றக் காவலில் உள்ளார்.

நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதை எதிர்த்தோ அல்லது ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் இந்தவழக்கு, விசாரணைக்கு உகந்ததுஅல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்றதடைச்சட்டத்தில் ஆதாரம் இருந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். உரிய ஆதாரமின்றி கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுசிறை தண்டனையுடன், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது.

செந்தில் பாலாஜியை கைது செய்த 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுக்கான காரணத்தை அவரிடம் தெரிவித்து கையெழுத்து போடச் சொன்னபோது அவர் மறுத்து விட்டார். காவலில் எடுத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனை கள் காரணமாக அவரை எங்களால் தனியார் மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை.

கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோராவிட்டால் அமலாக்கத் துறை தனது கடமையை செய்யத் தவறியதாகி விடும். எனவே தற்போது அவர் மருத்துவமனையில் உள்ள காலகட்டத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலகட்டமாக கருதக்கூடாது. அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவலை ஏற்றுக்கொண்டுதான்ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். அப்படியிருக்கும்போது இது எப்படி சட்டவிரோதமாகும்?

அவர் எங்களது விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது எனஅனுமதி வழங்கி உச்ச நீதிமன்றமேஉத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி: கைது செய்யப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் முடிந்தது முடிந்ததுதான். கரோனா அல்லது பூகம்பமே வந்தாலும்கூட முதல்15 நாட்களுக்கு பிறகு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரமுடியாது. வழக்கின் புலன் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

துஷார் மேத்தா: கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்களைப் பெற வேண்டிய அவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்கத் துறையின் உரிமை. ஏற்கெனவே அமர்வுநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த 8 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட தீவிரமான மருத்துவசிகிச்சை காரணமாக அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்பதால் அந்த காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு இருதரப்பிலும் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இருதரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x