Published : 28 Jun 2023 06:45 AM
Last Updated : 28 Jun 2023 06:45 AM

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி - சத்துணவு ஊழியர்கள் பட்டினி போராட்டம் வாபஸ்

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் 2-வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.படம்: ம.பிரபு

சென்னை: அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சென்னையில் 2 நாட்களாக நடந்துவந்த சத்துணவு ஊழியர்களின் பட்டினிப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அரசு ஊழியராக்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 72 மணி நேர பட்டினிப் போராட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கினர்.

சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.கலா தலைமையில் நடந்த போராட்டத்தில் 450-க்கும் மேற் பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்களில் பலர் 50வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், முதல்நாளே உடல் சோர்வடைந்த நிலையில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், 2-வது நாளாகநேற்றும் போராட்டம் தொடர்ந்தது.அப்போது சங்கத் தலைவர் கலா உட்பட15-க்கும் மேற்பட்டபெண்கள் உடல் சோர்வால் மயக்கமடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு தொடர் சிகிச்சை அளிக் கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர், கலா மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அமைச்சர் சந்திப்பு: இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சத்துணவு ஊழியர்களை சமூக நலத்துறை அமைச்சர்பி.கீதா ஜீவன் நேற்று மாலைசந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை அழைத்துப் பேசுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று மதியம் அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் சத்துணவு ஊழியர்களின் 15 கோரிக்கைகளில் 9 கோரிக்கைகளை 15 நாட்களில் நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 15 நாட்களில் தெரிவிக்கப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டதை சத்துணவு ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x