Published : 28 Jun 2023 12:56 AM
Last Updated : 28 Jun 2023 12:56 AM
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை நதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் வகையில் ரூ.9.97 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.
மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் வைகை ஆற்றில் விடப்படுகிறது. இதனால் ஆறு முழுமையாக மாசடைந்து நிலத்தடி நீர் நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. இதை தடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தில் ரூ.9.97 கோடியில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு அமைக்கப்படுகிறது. இதற்காக சோனையா கோயில் அருகே நேற்று பூமி பூஜை நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், எம்எல்ஏ தமிழரசி, நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட வருவாய் மணிவண்ணன், நகராட்சி ஆணையர் கண்ணன், துணைத் தலைவர் பாலசுந்தர், பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஒன்றியத் தலைவர் லதா அண்ணாத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி கூறியதாவது: நகரில் இருந்து கழிவுநீரை கொண்டு செல்ல 8.5 கி.மீ.க்கு பிரதான குழாய்கள் பதிக்கப்படும். மேலும் அக்ரஹாரம் சாலை, தாயமங்கலம் சாலை, சோனையா கோயில், அழகர் கோயில் சாலை, மதுராநகர் சாலை, கண்ணார் தெரு சாலை ஆகிய 6 இடங்களில் கழிவு நீர் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்படும்.
இங்கு சேகரமாகும் கழிவுநீர் முழுவதும் 2.2 கி.மீ., தூரத்தில் உள்ள மாங்குளம் குப்பைக் கிடங்கில் அமையும் 20 லட்சம் லி., சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படும். பின்னர் அதில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட் நீர் விவசாயத்துக்கும், கழிவுகள் உரமாக பயன்படுத்தப்படும். இத்திட்டம் ஓராண்டு காலத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT