Published : 28 Jun 2023 09:09 AM
Last Updated : 28 Jun 2023 09:09 AM
அண்ணாமலை உடன் தங்கள் கட்சிக்கு இருந்த பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டவிட்டதாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்.
அதிமுக, அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சி, உலக அளவில் 7வது பெரிய கட்சி என புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. எப்படி உணருகிறீர்கள்?
இது ஒவ்வொரு தொண்டனையும் எல்லையில்லா மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. தனக்குப் பிறகும் 100 ஆண்டுகளுக்கு அதிமுக வெற்றிப் பாதையில் பயணிக்கும் என்று எங்கள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான ஜெயலலிதா கூறி இருக்கிறார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஊட்டிய உணர்வால் தொண்டர்கள் உந்துதல் பெற்று அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்தனர். வரும் காலங்களில் அதிமுக முதல் நிலையை எட்டும் என்ற எண்ணத்தை இது தந்துள்ளது.
முதல் இடத்தைப் பிடிக்க அதிமுக எத்தகைய திட்டத்தைக் கொண்டிருக்கிறது?
அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் லட்சத்தில் இருந்தது. ஜெயலலிதா அதனை கோடிகளுக்கு மாற்றினார். அவர் 1.5 கோடி உறுப்பினர்களை சேர்த்தார். இபிஎஸ் பொதுச் செயலாளரான பிறகு உறுப்பினர் சேர்க்கை மேலும் அதிகமாகி இருக்கிறது. கட்சி எப்போதுமே முன்னோக்கித்தான் செல்கிறது; பின்னோக்கி அல்ல. இந்த வேகத்தில் கட்சியின் வளர்ச்சி இருக்குமானால், தமிழக மக்கள் அதிக அளவில் கட்சியில் இணைந்தால் நிச்சயம் முதலிடத்தை கட்சி பிடிக்க முடியும்.
முதலிடத்தைப் பிடிக்க தேசிய அளவில் அதிமுகவை இன்னும் அதிகமாகக் கொண்டு செல்ல திட்டம் இருக்கிறதா?
தற்போது கட்சி பல மாநிலங்களில் இருக்கிறது. கேரளா, அந்தமான், கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் அதிமுக இருக்கிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகமாக கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
அதிமுக முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமானால் வட இந்தியாவில் அதிமுகவுக்கு ஏற்பு அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இந்தி பேசும் மக்களிடம் அதிமுகவை கொண்டு செல்ல அதிமுகவிடம் என்ன திட்டம் உள்ளது?
எங்கள் தலைவர் தந்த கொள்கை என்பது பிரிவினை நாடோம்; சமநிலையில் இணைவோம் என்பதுதான். இந்த கொள்கையின்படி அதிமுகவை மேலும் வளர்த்தெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நாங்கள் எடுப்போம்.
சர்வதேச அளவில் முதலிடத்தில் இருப்பது உங்கள் கூட்டணி கட்சியான பாஜக. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர்கள் எடுத்த முயற்சி காரணமாக அவர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். நாங்கள் முதலிடத்திற்கு வருவதற்காக நாங்களும் எல்லா முயற்சிகளையும் எதிர்காலத்தில் எடுப்போம்.
அப்படியானால் நாட்டை ஆளும் இடத்திற்கு பாஜகவைப் போல அதிமுகவும் வரும் என்கிறீர்களா?
கட்சியை அகில இந்திய அளவில் வலுப்படுத்திவிட்டால், மக்கள் ஆதரவு கொடுக்கும்போது அதிமுக வரும். எங்கள் தலைவர்களின் விருப்பமும் அதுதான். நாங்கள் அகில இந்திய அளவில் முதலிடத்திற்கு வந்து, ஆட்சிக்கும் வந்தால் எங்கள் கட்சியை நிறுவிய எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதை நினைத்து மகிழத்தானே செய்வார்கள்.
செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கவில்லை என்ற பேச்சு இருக்கிறது என்கிறாரே பிரேமலதா விஜயகாந்த்?
அது நியாயமான கேள்வி. சரியான கேள்வியைத்தான் அவர் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்வியை தெளிவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. அமைச்சரவைப் பணிகளுக்காகத்தான் சம்பளம், கார் எல்லாம் கொடுக்கிறார்கள். இலாகா இல்லாத ஒருவருக்கு இவை எதற்கு?
ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாது; குறைக்கத்தான் முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார். அவரது இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமானால் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். எந்த ஒரு ஆதாயத்துக்கும், சான்றிதழ் பெறுவதற்கும் பணம் கொடுக்க மாட்டேன் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்க வேண்டும். காத்திருக்க தயாராக இருக்க வேண்டும். சட்டப்படி மட்டுமே நடக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருந்தால் ஊழல் ஒழிந்துவிடும். தேர்தல் நேரத்தில்
வாக்காளர்களுக்கு திமுக அதிக அளவில் பணம் கொடுக்கிறது. அதை ஏன் மக்கள் வாங்க வேண்டும்.
அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என்று சொல்ல முடியுமா?
நாங்கள் கொடுப்பதில்லை. பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கி ஆட்சி அமைப்பதில் அதிமுகவுக்கு நம்பிக்கை கிடையாது. திமுகவிடம்தான் அந்த கலாச்சாரம் இருக்கிறது. நாங்கள் எங்கள் சாதனைகளைச் சொல்லித்தான் வாக்கு சேகரிக்கிறோம். அதேபோல், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நாங்கள் கொடுப்பதில்லை. எனவே, மக்கள் உறுதியாக இருந்தால் ஊழலை நிச்சயம் ஒழிக்க முடியும்.
அடுத்ததாக, ஊழலை ஒழிக்க முக்கிய வழி அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழித்துவிட வேண்டும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுவரை ரூ. 2.40 லட்சம் கோடி வந்துவிட்டது என்றும் இன்னும் ரூ.1.40 லட்சம் கோடி வர வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அப்படியானால், இன்னும் வங்கிக்கு வராத அந்த ரூ.1.40 லட்சம் கோடி, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடம்தானே இருக்க வேண்டும். அந்த பணம் இனி வெறும் தாள்தான். எனவே, அவற்றை வைத்திருப்பவர்களுக்குத்தான் இழப்பு. நாட்டின் பொருளாதாரத்திற்கு இது வலு சேர்க்கும்.
கட்சியின் கருத்தாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். தற்போதுதான் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டதே. செல்போன் இருந்தால் போதும். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். கையில் பணம் தேவையே இல்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா 7வது இடத்தில் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களிடம் விவரம் ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனை வந்துவிட்டது. எனவே, ரூ.5, ரூ.10, ரூ.20 ரூ.50 நோட்டுக்கள் இருந்தால் போதும். ஊழல் தன்னாலே ஒழிந்துவிடும். வெறும் ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுக்கள் மட்டுமே இருந்தால், தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்க நினைக்கிறவர்கள் அவ்வளவு பணத்தை எப்படி கொண்டு செல்வார்கள்? கான்ட்ராக்டர்களிடம் எப்படி கமிஷன் பெறுவார்கள்? லாரியில்தான் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், ரூ.500 இருந்தால் பணம் கொடுக்க நினைப்பவர்களுக்கு அது எளிதாகிவிடும். எனவே, டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம்தான் ஊழலை ஒழிக்க முடியும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை இணைந்து எதிர்கொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கூடி ஆலோசித்திருக்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கலந்து கொண்ட அன்றே ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு காங்கிரசும், சிபிஎம் கட்சியும் எதிரி. கேரளாவில் காங்கிரசும் சிபிஎம் கட்சியும் எதிரி. எனவே, இவர்கள் எவ்வாறு ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க முடியும்?
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி வியூகத்தை வகுத்து செயல்படுவோம் என்று மல்லிகார்ஜூன கார்கே சொல்லி இருக்கிறாரே?.
பொதுவாக, போகாத ஊருக்கு வழி சொல்லக்கூடிய விஷயம் இது. கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்துபோன கதைதான் இது. அவர்கள் கூறுவது நடைமுறை சாத்தியமற்றது. முரண்பாடுகள் நிறைந்து இருப்பதால் அவர்கள் ஒன்று சேர்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். தமிழ்நாட்டில் இருந்த ஸ்டாலின் பிஹாருக்குச் சென்றார். அங்கு இருக்கக்கூடிய மக்கள் இவரை கோ பேக் ஸ்டாலின் என்கிறார்கள். உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவர்; வெளியூரில் புலியைப் பிடிக்கிறேன் என்று ஓடினார். எனவே, பாட்னாவில் நடந்தது ஒருநாள் கூத்து. அவ்வளவுதான்.
தமிழக அரசின் இரண்டாண்டு கால செயல்பாடு எப்படி இருக்கிறது?
மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது ஸ்டாலின் அரசு. 2 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய கோபத்தை பெற்றிருப்பது ஸ்டாலின் அரசாகத்தான் இருக்கும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு மிக மோசமாகி இருக்கிறது. போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. விலைவாசி .உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, எங்கும் எதிலும் ஊழல், வளர்ச்சிப் பணிகள் இல்லை. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அராஜகம் என அனைத்து விதித்திலும் திமுக மக்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத் தேர்தலும் வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அப்படி வந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் 40க்கு 40 தொகுகளிலும் வெற்றி பெறுவோம்.
அதிமுக - பாஜக உறவு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது?
கீழ் மட்டத்தில் இருக்கிறவர்கள் மத்தியில் சின்ன சின்ன மன மாச்சரியங்கள் இருந்தாலும், அவை தற்போது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மத்திய தலைமை அண்ணாமலையை கண்டிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாஜக தரப்பில் இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லையே?
ஜெயலலிதாவை குற்றவாளி என அண்ணாமலை பேசியதற்காக நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துவிட்டோம். அவரும் விளக்கம் அளித்துவிட்டார். ஜெயலலிதா தனக்கு வழிகாட்டி என்று கூறி புகழ்ந்து பேசி இருக்கிறார். அதனால் விஷயம் அத்தோடு முடிந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT