Published : 28 Jun 2023 02:12 AM
Last Updated : 28 Jun 2023 02:12 AM

வேகமெடுக்கும் யானைக்கல்-பெரியார் நிலையம் உயர்மட்ட பாலம் பணிகள்: நிறைவு தருவாயில் நில ஆர்ஜிதம்

மதுரை: மதுரை பெரியார் நிலையம் முதல் யானைக்கல் வரையிலான உயர் மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில நெடுஞ்சாலைத் துறை வேகப்படுத்தியுள்ளது. தற்போது அதற்கான நிலம் ஆர்ஜிதம் பணிகளை நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகரில் பெரியார் பஸ் நிலையம் முதல் சிம்மக்கல், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாக்குளம் வழியாக மாட்டுத்தாவணி வரை செல்லும் சாலை அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாகதான் மதுரையின் வடக்கு மற்றும் தெற்கு நகரப் பகுதிகளுக்கு தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளும், மக்களும் சென்று வருகின்றனர்.

அதனால், மாநகர பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து இந்த சாலையில் காலை முதல் மாலை வரை பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். இந்த சாலையில்தான், மாநகரின் முக்கிய வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்கள் உள்ளன. தற்போது மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த சாலையில் தல்லாக்குளம் முதல் கோரிப்பாளையம் வரையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் டெண்டர் முடிந்து விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பாலத்தின் தொடர்ச்சியாக ஏவி மேம்பாலத்தை அடுத்து, யானைக்கல் முதல் சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ்நிலையம் வரையில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து இந்த புதிய பாலத்திற்கான நிலம் ஆர்ஜிதம் பணிகள் தொடங்கியது. ஆனால், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் இடையில் சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதனால், இந்த உயர்மட்ட பாலம் திட்டமிட்டப்படி வருமா? வராதா? என பல கேள்விகள் எழுந்தன.

மதுரை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம் அவசியம் என மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து இருக்கிறது. அதனால், யானைக்கல்-பெரியார் பஸ் நிலையம் உயர்மட்ட பாலம் பணிகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மதுரையை சேர்ந்த சரவணக்குமரன் என்பவர் கேட்ட கேள்விக்கு பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் சந்திரன் அளித்த பதிலில், "பெரியார் பஸ் நிலையம் முதல் யானைக்கல் வரையிலான உயர் மட்ட பாலம் பணிக்கு நிலம் எடுப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது. பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோரிப்பாளையம் பாலம் பணியுடன் யானைக்கல் முதல் பெரியார் பஸ் நிலையம் வரையிலான பாலத்தையும் சேர்ந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகதான் நில ஆர்ஜிதம் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x