Published : 27 Jun 2023 08:04 PM
Last Updated : 27 Jun 2023 08:04 PM
தருமபுரி: “சாதி அமைப்புகளை சாடிய வடலூர் வள்ளலாரை சனாதனவாதி என ஆளுநர் கூறலாமா?” என தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பயிற்சி முகாம் இன்று (27-ம் தேதி) நடந்தது. சாய் சாமுண்டீஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: ''தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், வடலூர் வள்ளலார் சனாதனத்தை உயர்த்திப் பிடித்ததாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
ஆனால், வடலூர் வள்ளலார் சாதிய, சனாதன முறையை கடுமையாக சாடியவர். சாதிய அமைப்புகளை சாடிய வள்ளலார் எப்படி சனாதனவாதியாக இருக்க முடியும்? தமிழகத்தில் வள்ளலார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், வைகுண்டர், பெரியார், சிங்காரவேலர், ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். திராவிட இயக்கமும் பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி சமூக சீர்திருத்தவாதிகளை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏஜென்ட் ஆக செயல்பட்டு வருகிறார்'' என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT