Last Updated : 27 Jun, 2023 07:06 PM

60  

Published : 27 Jun 2023 07:06 PM
Last Updated : 27 Jun 2023 07:06 PM

“தமிழ் தேசியத்தை கைவிட்டுவிட்டால் பாஜகவுடன் சீமான் நெருங்கி வரலாம்” - ஹெச்.ராஜா

சிவகங்கை: “தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை சீமான் கைவிட்டுவிட்டால், பாஜகவுடன் அவர் நெருங்கி வரலாம்” என தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் பாஜக சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கண்காட்சியை ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நாட்டின் குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சினிமா பிரபலம் மட்டுமே அரசியலுக்கு உதவாது என திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன்.

இந்த நாட்டை கொள்ளையடித்தோரில் ப.சிதம்பரமும் ஒருவர். அவர் அதிகமாக பேசக் கூடாது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையவில்லை என்றால் இந்தியா பிச்சைக்கார நாடாக மாறியிருக்கும்.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சிபிஐக்கு புகார் அளித்துள்ளனர். ஆறாவது நபராக தான் அண்ணாமலை புகார் அளித்துள்ளார். விரைவில் நீதிமன்றம் உத்தரவில் மு.க.ஸ்டாலினை சிபிஐ விசாரிக்க வாய்ப்புள்ளது.

திமுக எம்பி ஞானதிரவியம், பாதிரியாரை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஆனால், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது கண்துடைப்பு நாடகம்.

அனைத்து கட்சி கூட்டம் நடந்துள்ள நிலையில் மணிப்பூர் கலவரம் விரைவில் முடிவுக்கு வரும். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு செல்லவே அறநிலையத் துறைக்கு அதிகாரமில்லை. சட்டத்தை அறியாதவரே அமைச்சராக உள்ளார். அமலாக்கத் துறையால் பாதிக்கப்பட்டவர்களே பீகாரில் கூட்டம் நடத்தினர். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற வாய்ப்பில்லை. பாஜகவில் பிரதமர் வேட்பாளர் மோடி. ஆனால், அங்கு கூடியவர்களில் யார் பிரதமர் வேட்பாளர்?” என்றார்.

மேலும் பேசிய அவர், “சீமான் பேசக் கூடிய விஷயங்களை அவருக்கு முன்பே நான் பேசியிருக்கிறேன். சீமான் தமிழ் தேசியத்தை கைவிட்டால் பாஜகவுடன் நெருங்கி வரலாம். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம், இந்திய தேசியம் என்பதே ஒற்றுமை. மற்றபடி அவர் திராவிடத்தை எப்படி ஏற்றுகொள்ளவில்லையோ, நானும் ஏற்றுகொள்ளவில்லை. சீமான் என் நண்பர். பிரிவினைவாதத்தை விட்டு, பகுத்தறிவோடு சிந்தித்து அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் வருகிறதா என பார்ப்போம். மாற்றம் வந்தால் அடுத்து பேசுவோம்” என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x