Last Updated : 27 Jun, 2023 06:50 PM

 

Published : 27 Jun 2023 06:50 PM
Last Updated : 27 Jun 2023 06:50 PM

ராமநாதபுரம் தனியார் மனநல காப்பகத்தில் இருந்து 40 பேரை அரசு காப்பகத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் தடை

மதுரை: ராமநாதபுரத்தில் தனியார் காப்பகத்தில் இருக்கும் 40 மனநலம் குன்றியவர்களை அரசு காப்பகத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராமநாதபுரம் ஹியூமானிட்டேரியன் அறக்கட்டளை சார்பில் நாகேஸ்வரன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''நாங்கள் 15 ஆண்டுகளாக அரசின் அனுமதியுடன் மனநல காப்பகம் நடத்தி வருகிறேன். எங்கள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்கள் தங்கியுள்ளனர். காப்பகத்துக்கு அரசு வழங்க வேண்டிய நிதி வராததால் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் நிதி கோரிக்கை மீது 12 வாரத்தில் முடிவெடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து எங்கள் காப்பகத்தில் ஆய்வு நடத்தி காப்பகத்தில் இருக்கும் 51 பேரில் 40 சரியாகிவிட்டதாகவும், அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். எங்கள் காப்பகத்திலிருந்து 40 பேரை அரசு காப்பகத்துக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிடுகையில், காப்பகத்தில் இருப்பவர்கள் சரியாகவில்லை. அவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றுவதால் பிரச்சினை ஏற்படும் என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் புகைப்படங்களை பார்க்கும்போது, அவர்கள் வேறு காப்பகத்துக்கு செல்ல தகுதியானவர்கள் என எந்த பரிசோதனை அடிப்படையில் முடிவுக்கு வந்தார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. எந்த மாதிரியான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. எதன் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனவே மருத்துவக் குழு அறிக்கையை ஏற்க முடியாது.

மனுதாரர் அரசிடம் நிதி கேட்டுள்ளார். அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் காப்பகத்தில் இருப்பவர்கள் வேறு காப்பகத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். காப்பகங்களுக்கான நிதி அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் காப்பகத்தில் இருப்பவர்களை உறவினர்களுடன் அனுப்பவில்லை. அரசு காப்பகத்துக்கு மாற்றுகின்றனர். மனநலம் குன்றியவர்கள் தற்போதைய சூழலை நன்றாக பழகியிருப்பார்கள்.

அதிகாரிகள் தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப மனநலம் குன்றியவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற அவர்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல. சிலர் பத்தாண்டுக்கு மேலாக ஒரே காப்பகத்தில் உள்ளனர். இவர்களால் அந்தச் சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாது. அவர்களை வேறு இடத்துக்கு மாற்றுவதால் பிரச்சினை ஏற்படும். அதிகாரிகளின் அணுகுமுறையை ஏற்க முடியாது. மனுதாரர் காப்பகத்தில் இருந்து 40 மனநலம் குன்றியவர்களை அரசு காப்பகத்துக்கு மாற்றுவதற்கு தடை விதிக்கப்படுகிறது'' என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x