Published : 27 Jun 2023 04:12 PM
Last Updated : 27 Jun 2023 04:12 PM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடப்பது என்ன?- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

அமைச்சர் சேகர்பாபு | கோப்புப்படம்

சென்னை: "சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஒரே ஒரு உண்டியல்கூட இருக்காது. மற்ற திருக்கோயில்களில் உண்டியல்கள் இருக்கும். வரவு செலவு இருக்கும். இந்த திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து எடுக்கின்றபோது, அன்றைக்கு திருக்கோயிலில் இருந்த ரொக்கப் பணம் எவ்வளவு என்பதை இதுவரை தணிக்கை செய்வதற்குகூட அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சிதம்பரம் திருக்கோயிலில், ஓர் அதிகார மையத்தை ஏற்படுத்திக் கொண்டு தீட்சிதர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசைப் பொருத்தவரையில், வழிபாட்டு முறைகளில், ஆதிகாலம் தொட்டு என்ன வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறதோ,அதில் துளியளவுகூட இந்து சமய அறநிலையத் துறை தலையிட்டு வழிபாட்டு முறைகளை மாற்றுகின்ற எண்ணம் இல்லை.

அதே நேரத்தில், திருக்கோயில்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதை டீனாமினேஷன் டெம்பிளாக (சமயக் கோயில்) அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசைப் பொருத்தவரையில், மக்களுடைய நன்கொடைகளால் இந்த திருக்கோயில் நடந்துகொண்டிருக்கிறது. இத்திருக்கோயிலில் பார்த்தால், ஒரே ஒரு உண்டியல்கூட இருக்காது. மற்ற திருக்கோயில்களில் உண்டியல்கள் இருக்கும். வரவு செலவு இருக்கும். இந்த திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து எடுக்கின்றபோது, அன்றைக்கு திருக்கோயிலில் இருந்த ரொக்கப்பணம் எவ்வளவு என்பதை இதுவரை தணிக்கை செய்வதற்குகூட அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

அதேபோல், விலை மதிப்புள்ள தங்க நகைகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆபரணங்கள், தீட்சிதர்கள் திருக்கோயிலுக்கு பொறுப்பேற்றதற்குப் பிறகு இதுநாள் வரையில், எவ்வளவு தங்க நகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற கணக்கைக்கூட அவர்கள் காண்பிக்க மறுக்கின்றனர்.

மேலும் இந்த காலகட்டங்களில் திருக்கோயிலின் வரவைப் பற்றி எந்தவிதமான தகவலையும் தெரிவிக்க மறுக்கிறார்கள். அந்தக் கோயிலை ஏதோ அவர்களுடைய சொந்த நிறுவனம் போல் பாவித்துக் கொண்டுள்ளனர். இதைத்தான் அரசு தட்டிக்கேட்கிறது. மக்கள் பணத்தால், மக்களுடைய முழு அர்ப்பணிப்பால் நடக்கின்ற இத்திருக்கோயிலில், மக்களுக்கும் அரசுக்கும் சேர்க்க வேண்டிய வெளிப்படையான தகவல்களைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்.

கனகசபையின் மீதேறி பக்தர்கள் வழிபடுவது குறித்து இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அறநிலையத்துறை சார்பில், கனகசபையின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசு ஒரு ஆணையை பிறப்பித்திருக்கிறது. ஆனால், அவர்கள் திருமஞ்சனத்தைக் காரணம் காட்டி, ஜூன் 24 முதல் 27 வரையிலான 4 நாட்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். அவர்கள் இவ்வாறு கூறுவதற்கு எந்த நடைமுறையும் இல்லை.

எனவே, இந்த 4 நாட்களும் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அரசாணையின்படி, கனகசபையின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஆனிதிருமஞ்சனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் சார்பில், கோயிலினுள் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த பதாகையை திங்கள்கிழமை அகற்றினர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x