Published : 27 Jun 2023 03:14 PM
Last Updated : 27 Jun 2023 03:14 PM
சென்னை: "விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி என்ற பெருமையைப் பெற்ற திமுக அரசு குறைந்த அளவு நிதியை ஒதுக்கி, விஞ்ஞான முறையில் அம்மா உணவகங்களை மூட முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2013-ஆம் ஆண்டு அம்மா உணவகங்களை துவங்கினார்கள். மக்களுடைய ஏகோபித்த ஆதரவின் காரணமாக இந்த உணவகங்கள் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சில பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.
சென்னையில் ஒரு வார்டுக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் 200 வார்டுகளிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டு இட்லி, பொங்கல், கலவை சாதங்கள், சப்பாத்தி போன்ற உணவு வகைகள் மலிவு விலையில் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பசிப் பிணியை தீர்த்துக்கொண்டனர். இந்த உன்னத திட்டத்தைக் கொண்டுவந்த ஜெயலலிதாவை, மக்கள் அனைவரும் மனதாரப் பாராட்டினார்கள்.
குறிப்பாக, கரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அனைத்துத் தொழில்களும் முடங்கியபோது, தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களுக்கு வருகைதரும் அனைவருக்கும் விலையில்லாமல் மூன்று வேளையும் உணவு வழங்கினோம். இதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதிமுக அரசு இருந்தவரை, அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவும்; சமையலுக்குத் தேவையான காய்கறிகள் கூட்டுறவு பண்டக சாலைகளில் இருந்தும் வழங்கப்பட்டு வந்தது.
`அம்மா’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியதுபோல் பதறும் இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கி, படிப்படியாக மூடுவிழா நடத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், அதிமுக அரசிலும், ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும், அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய மகளிர் வேலை செய்து வந்தனர். ஆனால், இப்போது ஒரு உணவகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் உணவின் தரம், அதிமுக ஆட்சியில் இருந்ததுபோல் நிறைவாக இல்லை. இதன் காரணமாக, இரவு வரை எப்போதும் பரபரப்பாக இருந்த அம்மா உணவகங்கள் தற்போது பகுதியளவு மட்டுமே செயல்படுகிறது.
உணவுப் பொருட்கள் வழங்குவது 90 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. பல இடங்களில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வேலை செய்யவில்லை;குளிர்சாதனப் பெட்டி (Fridge) பழுதடைந்துள்ளது. குடிநீர் முழுமையாக வழங்கப்படுவதில்லை.
உதாரணமாக, சென்னை, ராயப்பேட்டை பாரதி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் இருக்கும் குடிநீர் தொட்டி இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. பல அம்மா உணவகங்களின் மேற்கூரைகள் சரியில்லை என்று காரணம் காட்டி மூடப்படுகிறது. ஒருசில உணவகங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றமடிக்கிறது. பல இடங்களில் மின் விசிறி காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. ஒருசில அம்மா உணவகங்களில் தனியாருக்குச் சொந்தமான பொருட்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான உணவகங்களில் உணவு சாப்பிடும் மேஜையின் கால்கள் உடைந்துள்ளதால் சாப்பிட வரும் ஒருசிலரும் தட்டை கையில் ஏந்தி சாப்பிடுகின்றனர். மேற்சொன்ன அனைத்தும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்.
சாப்பிடச் செல்லும் மக்கள் 2021க்கு முன்பு இருந்த அம்மா உணவகங்களையும், அதன் தற்போதைய நிலையையும் கண்ணீருடன் ஒப்பிடுகின்றனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைந்துகொண்டே செல்கின்றனர். இதையே காரணமாகக் கொண்டு, இங்கு சாப்பிட வரும் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற ஒரு பொய், புனைசுருட்டு காரணங்களை இந்த ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடுவது வெட்கக்கேடானது.
‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி. ``அம்மா என்றால் அன்பு; தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’' என்று போதித்த வள்ளலின் வழியில் வந்த நாம் தாய்மையைப் போற்றுவது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் பெயரால் உருவான அம்மா உணவகத்தைத் தொடர்ந்து திறம்பட நடத்தி ஏழை, எளியவர்களின் பசிப் பிணியை போக்கினோம். அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்று நான் சட்டமன்றத்தில் பேசியபோது, இந்த திமுக அரசு கண்டிப்பாக மூடமாட்டோம் என்று கூறியது.
2023-2024ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, கடந்த ஆண்டு அம்மா உணவகங்கள் மூலம் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த சென்னை மாநகராட்சி, இந்த ஆண்டு பணியாளர் ஊதியத்துக்கு 42.30 கோடி ரூபாயும், சமையல் உபகரணங்கள், கட்டடங்கள் சீரமைப்புக்கு 9.65 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. பராமரிப்பு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி கண்டிப்பாக அம்மா உணவகங்களின் பராமரிப்புக்குப் போதாது. ஆனாலும், இந்த குறைந்தபட்ச நிதியைக் கொண்டு அவசரமாக தேவைப்படும் பராமரிப்புப் பணிகளையாவது மேற்கொண்டிருக்கலாம்.
அதையும் இந்த திமுக அரசின் நிர்வாகம் இதுவரை செய்ததாகத் தெரியவில்லை. அதிமுக அரசில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆட்சியாளர்கள் நேரில் வந்து அம்மா உணவகங்களின் சேவையைப் பார்த்து, அவரவர்கள் மாநிலத்தில் துவக்கினார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மா உணவகங்களை மூடும் படுபாதகமான செயலை இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டியிலும், அறிக்கைகள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால், தொடர்ந்து இந்த அரசு பணியாளர்களைக் குறைத்தும், தரமற்ற பொருட்களை வழங்குவதாலும், தரமான உணவு வகைகளை தயாரித்து வழங்க முடியவில்லை. மேலும், பழுதடைந்த மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டி, உணவுப் பாத்திரங்கள் போன்றவற்றை சரிசெய்யாததாலும், கட்டட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும் அம்மா உணவகங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன.
எனவே, அதிமுக அரசில் ஏழை, எளிய மற்றும் தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை முழுமையாகப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி என்ற பெருமையைப் பெற்ற திமுக அரசு குறைந்த அளவு நிதியை ஒதுக்கி, விஞ்ஞான முறையில் அம்மா உணவகங்களை மூட முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT