Published : 27 Jun 2023 02:28 PM
Last Updated : 27 Jun 2023 02:28 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொள்ளும் வேலையை மத்திய அரசு செய்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அனைத்து மருத்துவ இடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். செவிலியர் படிப்புக்கும் பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மாநிலங்களை டம்மியாக்கிவிட்டு அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொள்ளும் வேலையை மத்திய அரசு செய்கிறது. புதுவை முதல்வர் ரங்கசாமி இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.
இதை எதிர்த்து போராட ரங்கசாமிக்கு தெம்பும், திராணியும் உள்ளதா? ரங்கசாமியின் அதிகாரத்தை ஆளுநர் தமிழிசை பறித்துக் கொண்டு, சூப்பர் முதல்வராக 2 ஆண்டுகளாக செயல்படுகிறார். ரங்கசாமி டம்மி முதல்வராக வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்துள்ளார். அதன் வெளிப்பாடாக முதல்வர் ரங்கசாமி, நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரிகள் முதல்வராக நான் சொல்வதை கேட்பதில்லை. நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என அழுது புலம்புகிறார்.
இந்திய அரசியலமைப்பு, யூனியன் பிரதேச சட்டத்தில் முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை முறையாக பயன்படுத்தாமல் முதல்வர் ரங்கசாமி புலம்புவதில் அர்த்தம் கிடையாது. மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநரிடம் சரண்டர் செய்துவிட்டு ரங்கசாமி ஏன் வெளியே புலம்புகிறார். ஆள தகுதியில்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வெளியே செல்லுங்கள்.
புதுவை மாநில என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார் ரங்கசாமி, மாநில அந்தஸ்து பெற மத்திய பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி ஆட்சி அமைத்தார். தற்போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஏன் முதல்வராக உள்ளேன் என ரங்கசாமி கூறுவது கபடநாடகம். அனைத்து கூட்டங்களையும் ஆளுநர் நடத்துகிறார். முதல்வர், அமைச்சர்கள் அந்த கூட்டத்தில் இல்லை. சர்வாதிகாரி போல ஆளுநர் செயல்பட்டு நிர்வாகத்தை சீர்குலைக்கிறார், நீதிமன்றத்தை அவமதிக்கிறார்.
முதல்வரும், அமைச்சரும் கைகட்டிக்கொண்டு ஆளுநருக்கு சேவகம் பார்க்கின்றனர். இவர்கள் ஆள தகுதியற்றவர்கள் என்பதையே நிரூபித்துள்ளனர். முதல்வர் டம்மி முதல்வர் என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். தற்போது முதல்வர் தனது புலம்பலை வெளிப்படுத்தி அதை நிரூபித்துள்ளார்.
வில்லியனுாரில் விளைநிலத்தை மனைகள் என்ற போர்வையில் விற்பனை செய்கின்றனர். நகர அமைப்பு அனுமதியின்றி பத்திரம் பதியப்படுகிறது. இதில் தொடர்புடையவர் தற்போது அமைச்சராக உள்ளார். அவரின் இடம் 300 பிளாட்டுகள் விற்கப்பட்டுள்ளது. புதுவையில் ஒவ்வொரு பத்திரத்திற்கும் பணம் வாங்கி முதலமைச்சர் அலுவலகத்துக்கு கொடுக்கப்படுகிறது. தற்போது கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பில் ஆளும்கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை வைக்க உள்ளனர். இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சரிடமும் புகார் தரவுள்ளனர். கோவில் நிலத்தை விற்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் ஆட்சியாளர்கள் சாதகமாக உள்ளனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியும்." இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT