Published : 27 Jun 2023 02:15 PM
Last Updated : 27 Jun 2023 02:15 PM

மின் துறை சீர்திருத்தத்தை எதிர்ப்பதா? - எதிர்க்கட்சிகளுக்கு தமிழக பாஜக கண்டனம்

சென்னை: மின் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் நடைபெறவிருக்கிற நேரத்தில், எதிர்க்கட்சிகள் எதிர்மறை பிரச்சாரம் செய்வதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''மின் பயன்பாட்டில் திறன் கணக்கீட்டு இயந்திரம் (ஸ்மார்ட் மீட்டர்) இந்தியாவில் வெகு விரைவாக பொருத்தப்பட்டு வருகின்றன. இவை முறைகேடுகளை தடுப்பதோடு, துல்லியமாக நம் மின் நுகர்வை கணக்கிடும். 2024 ம் ஆண்டுக்குள் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் 2025க்குள் இந்தியாவின் பெரும்பாலான வீடுகளிலும் பயன்பாட்டுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின், நாளின் நேரத்திற்கேற்ப மின்சார கட்டணம் (ToD) என்கிற புதிய திட்டத்தை, விதி திருத்தத்தின் மூலம் மத்திய அரசு அறிவித்துள்ளது. வழக்கம் போலவே, எதிர் கட்சிகள் இந்த விதிகளை கண்மூடித்தனமாக எதிர்க்க துவங்கியுள்ளன. ToD என்கிற இந்த கட்டண முறையின் கீழ், சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், தற்போது நாள் முழுவதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக இருக்கும். 2024 ஏப்ரல் 1 முதல் 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை கொண்ட வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கும், 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் ToD கட்டணம் பொருந்தும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.

சூரிய சக்தி உற்பத்தி, அனல் மின் உற்பத்தி, நீரேற்று மின் உற்பத்தி மற்றும் எரி வாயு மின் உற்பத்தி என பல வகைகளில் மின்சார உற்பத்தியானது நடைபெறுகிறது. ஒவ்வொரு வகை மின் உற்பத்தியின் கொள்முதல் அளவு வேறுபட்டாலும், இது வரை பகிர்மான கழகங்களால் நுகர்வோருக்கு மின்கட்டணம் சராசரியாக கணக்கிடப்பட்டு வருகிறது. புதிய திட்டப்படி, சூரிய சக்தி மின்சாரம் மலிவானது என்பதால், பகல் நேரத்தில் கட்டணம் குறைவாக இருக்கும். எனவே கட்டணம் குறைவாக உள்ள நேரத்தில் அதிகம் பயன்படுத்தும் சலவை இயந்திரங்கள், இஸ்திரி பெட்டி, சுடுநீர் இயந்திரம் போன்ற பல்வேறு தேவைகளை பகல் நேரத்தில் பயன்படுத்தி கட்டணக்குறைவை பயன்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது.

சூரிய சக்தி இல்லாத நேரங்களில் அனல் மற்றும் நீரேற்று மின்சாரம் மற்றும் எரிவாயு அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாக வருங்காலத்தில் அனல் மின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உலகமே உள்ள நிலையில், மாற்று எரிசக்தியை நாம் அதிக அளவு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால், திட்டமிட்ட ரீதியில் சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவு உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதனடிப்படையில், குறைந்த விலையில் 24 மணி நேரமும் தரமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கும், மின்சாரத் துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு முயற்சியாகவே தற்போதைய விதி திருத்தம் அமலுக்கு வருகிறது.

இதன்மூலம் முதலீடுகள் அதிகரித்து, அதிக மின் உற்பத்தி பெருகுவதால் தங்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதோடு, உயர் மின் அழுத்தம் அல்லது குறைவான மின் அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இல்லாத தரமான மின்சார விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும், பகல் நேரங்களில் குறைந்த விலையில் மின்சார கட்டணம் வழங்கப்படுவதால் மின் கட்டணம் குறைவதால் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதே வேளையில், வீடுகளின் அதிக மின் தேவைகளை பகல் நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் வீடுகளுக்கான மின்கட்டணம் குறைவதோடு, ஸ்மார்ட் மீட்டர்களினால் மின் திருட்டு மற்றும் முறைகேடுகள் தடுக்கப்படுவது உறுதியாகிறது.

இந்த ஸ்மார்ட் மீட்டர்களை ஒவ்வொரு வீட்டிலும் பொருத்துவதற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து இத்துறையில் உள்ள ஊழலை ஒழித்து, சீர்திருத்தத்திற்கு வழி வகுக்கிறது. ஆகையால், மின் துறையில் மிக பெரிய சீர்திருத்தம் நடைபெறவிருக்கிற நேரத்தில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே எதிர்மறை பிரச்சாரத்தை மேற்கொள்வது நாட்டிற்கு, நாட்டு மக்களுக்கு இழைக்கும் மிக பெரிய துரோகம். இதையெல்லாம் கடந்து, எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து, கட்டமைப்பை உறுதியாக்கி வளமான இந்தியாவை படைப்போம்.'' இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x