Published : 27 Jun 2023 12:33 PM
Last Updated : 27 Jun 2023 12:33 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கீழ ராஜகுல ராமன் ஊராட்சி தலைவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் நிர்வாகத்தை மேற்கொள்ளக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே கீழ ராஜகுல ராமன் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பொன் பாபாபாண்டியன்(50). இவர் தனது மனைவி ரூபாராணி(45) பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்காக அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.17,600 தொகையை செலுத்தி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து(70) கூடுதலாக ரூ.10 ஆயிரம் கேட்டு, பின் ரூ.6 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பொன் பாபாபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். திங்களன்று காலை பொன் பாபாபாண்டியன் ஊராட்சி தலைவர் காளிமுத்துவிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் ஊராட்சி தலைவர் காளிமுத்துவை கைது செய்தனர். இதனால் ஊராட்சித் தலைவர் காளிமுத்துவை மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து ஊராட்சி நிர்வாக பொறுப்பு துணைத் தலைவர் குருவையா மற்றும் செயலர் கருத்தபாண்டி வசம் ஒப்படைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்(பி.டி.ஓ) நேரடி பார்வையில் கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் - வெம்பக்கோட்டை சாலையில் அமர்ந்து செவ்வாய்க்கிழமை காலை முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, வெம்பகோட்டை வட்டாட்சியர் ராமநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையுடன் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT