Published : 27 Jun 2023 12:02 PM
Last Updated : 27 Jun 2023 12:02 PM

வளர்ந்து வரும் தொழில்களை ஊக்குவிக்க பெரும் குழுமங்கள் அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பன்னாட்டு குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினவிழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "உலகளாவிய தரம் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் தொழில்துறையில் நுழைய வழிவகை செய்யவும் பெரும் குழுமங்கள் அமைக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 4 பெருங் குழுமங்கள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், நடந்த பன்னாட்டு குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும்பங்காற்றும் MSME துறையின் முன்னேற்றத்துக்காக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஓய்வு பெற்ற அதிகாரி என்.சுந்தரதேவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் குறுகிய கால நடவடிக்கைகள், நடுத்தர கால நடவடிக்கைகள், நீண்ட கால நடவடிக்கைகள் என வகைப்படுத்தி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளமானது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் மதுரையில் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. தொழில்முனைவோர்கள் 159 வகையான தொழில் உரிமங்களை 27 அரசு துறைகளிடமிருந்து எளிதாகப் பெற Single Window Portal 2.0 தளம் நமது அரசு பொறுப்பேற்றவுடன் துவக்கி வைக்கப்பட்டு, இதுவரை 20 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 17 ஆயிரத்து 618 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டு 1,903 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

தமிழகத்தில் பரவலாக குறுந்தொழில் நிறுவனங்கள் கொண்ட பல்வேறு குறுங்குழுமங்கள் (Micro Cluster) உள்ளன. ஊரகப்பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிபடுத்திடவும் இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்நிறுவனங்கள் தமது உலகளாவிய தரம் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் தொழில் துறையில் நுழைய வழிவகை செய்யவும் பெரும் குழுமங்கள் அமைக்கப்படும் என நமது அரசால் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 4 பெருங்குழுமங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டிவனத்தில் மருந்து பொருட்கள் பெருங்குழுமம். திருமுடிவாக்கத்தில் துல்லிய உற்பத்திப் பெருங்குழுமம் (Precision Engineering Cluster),விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பெருங்குழுமம் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி, மின்வாகனத் துறை சார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஆறு மாவட்டங்களில் 6 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை, கோயம்புத்தூர் போன்ற தொழில் மிகுந்த நகரங்களில் பணிபுரியும் வெளியூர், வெளிமாநில பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தரமான மற்றும் குறைந்த வாடகையில் தங்குமிட வசதி என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக சவாலாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக அரசு சார்பில் தங்கும் விடுதிகள் (Hostel) கட்டித் தரப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக, சென்னை, கோயம்புத்தூர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டு, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு செயல் திட்டங்கள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலிருந்து மொத்தம் 6,257 புத்தொழில் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் இந்தியா தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே, 2016ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்குக்கும் அதிகம். திமுக அரசின் வேகத்துக்கும் செயல்திறனுக்கும் இதுவே சிறந்த சான்று என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை, ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது போல, நடப்பு நிதிஆண்டில் சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் வட்டார புத்தொழில் மையங்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த நிதியாண்டு 30 கோடி ரூபாய் சிறப்பு நிதியைப் பட்டியலின/ பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்ற ஆண்டில், இந்தத் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டில் 50 கோடி ரூபாயாக இந்த சிறப்பு நிதியானது உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களைப் புத்தாக்க சிந்தனையுடன், படிப்பு முடித்தபின் பலருக்கு வேலை கொடுப்பவராக மாற்றக்கூடிய “பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” நமது அரசால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை நான் பார்வையிட்டேன். இவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தொழில்துறையின் வளர்ச்சிக்கு MSME நிறுவனங்களின் பங்களிப்புக்காக விருது பெற்றுள்ள நிறுவனங்களுக்கும், நிறுவனங்களின் நிர்வாகத்துக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்நிறுவனங்கள் மென்மேலும் வளர்ந்து இந்திய அளவில் ஏன் உலக அளவில் சிறப்பு பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.MSME நிறுவனங்களின் உயிர்நாடி என்பது வங்கிகள் அந்த நிறுவனங்களுக்கு அளிக்கும் தடையில்லா நிதி வசதி. அந்த நிதிவசதியினை MSME நிறுவனங்களுக்கு வழங்கிய சிறந்த மூன்று வங்கிகளுக்கான விருதுகளையும் இன்று நான் வழங்கி உள்ளேன். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கிறது, இருக்கும் என்பதை நான் உறுதி செய்கிறேன். அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு எடுத்து வருகிறது. கடந்த ஆட்சியில் MSME துறைக்கான நிதி ஒதுக்கீடு 607 கோடியே 60 லட்சம் ரூபாய் என இருந்த நிலையில், இது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 1505 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம் MSME துறை எடுத்திருக்கும் புதிய முயற்சிகளால் 120 பயனாளிகளுக்கு 59 கோடியே 71 லட்சம் ரூபாய் மானியம், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1510 கோடி ரூபாய், விருது பெறுவோர் 49 பேருக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய், 262 ஏக்கர் பரப்பில் 153 கோடியே 22 லட்சம் ரூபாய் முதலீட்டில் 3 சிட்கோ தொழிற்பேட்டைகள் என மொத்தம் 1723 கோடியே 5 லட்சம் ரூபாய் அளவுக்கு பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நான் இதுவரை குறிப்பிட்ட 20க்கும் மேற்பட்ட திட்டங்கள் எல்லாம் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது அரசு பொறுப்பேற்ற பின் தொடங்கப்பட்ட திட்டங்கள்.தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சமத்துவ வளர்ச்சியாக இருக்க வேண்டும் என நாங்கள் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால், உங்களின் ஒத்துழைப்பு குறிப்பாக MSME நிறுவன சங்கங்களின் பங்களிப்பு மிக, மிக இன்றியமையாதது. பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளான இன்று, தமிழகத்திலுள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x