Published : 27 Jun 2023 12:26 PM
Last Updated : 27 Jun 2023 12:26 PM
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 924 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் மூலமும், முட்டைக்கென தனி ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக முட்டையும் விநியோகிக்கப்படுகிறது. சத்துணவு மையங்கள் மூலம் வழங்கப்படும் முட்டைகளில், ஒரு அட்டை யில் 30 முட்டைகள் இருக்க வேண்டும்.
“30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டையில், சராசரியாக 4 முட்டைகள் வரை சற்றே அழுகிய நிலையைத் தொடக் கூடிய பழைய முட்டைகளும், 15-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான முட்டைகளும் இருக்கின்றன” என்று சத்துணவு அமைப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“ஒரு மாணவருக்கு விநியோகிக்கப்படும் முட்டையின் எடை 45 கிராம் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு வருவதில்லை. ஒரு அட்டையில் 10 முட்டைகள் மட்டுமே நிர்ணயித்த அளவில் இருக்கிறது. மற்ற முட்டைகள் ஏறக்குறைய 35 கிராம் அளவிலேயே இருக்கிறது. முட்டை விநியோகிப்பாளர் நல்ல முட்டைகளை, வணிக நோக்கோடு கடைகளில் கொடுத்து விட்டு, ‘பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை தானே!’ என்று சிறிய அளவிலான முட்டைகளை பள்ளிக்கு கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
இந்த முட்டைகளை மாணவர்களுக்கு நேரடியாக விநியோகிக்கும் சமையலரும், சமையல் உதவியாளரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடுகிறது. சற்றே நாளான அழுகும் நிலையில் உள்ள முட்டைகளை சேர்த்து அனுப்பி விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டால், உடனடி நடவடிக்கைக்கு உள்ளாவது நாங்கள் தான்; பொருள் விநியோகிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என சத்துணவு அமைப்பாளர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
“நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்களில் அளவு குறைவாக இருக்கும். அதை பலமுறை எடுத்துக் கூறினாலும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இந்தப் பிரச்சினையோடு இப்போது தரமற்ற முட்டை விநியோகமும் சேர்ந்துள்ளது. இதுதொடர்பாக வட்டார சத்துணவு மேலாளரிடம் கூறினால், “அதை அப்படியே எழுதிக் கொடுங்கள், நாங்கள் மேலே அனுப்புகிறோம்” என்கின்றனர்.
மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் முட்டை வழங்கப்படுகிறது. ‘முட்டையை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும்’ என்ற விதி இருத்தும், அதை சமூக நலத்துறை கவனத்தில் கொள்வதில்லை. முட்டை விரும்பாத மாணவர்கள் வேறு எதையும் பெறாமலேயே செல்கின்றனர்” என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சத்துணவு அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி வட்டார சத்துணவு மேலாளரிடம் கேட்டதற்கு, “ஒவ்வொரு மாதமும் சப்ளை செய்த முட்டைக்கான ரசீது கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம், நாங்கள் குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். உடனே ஒப்பந்ததார், சத்துணவுத் திட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் பேசுகிறார். அவரோ, ‘இந்த முறை பில்லை போடுங்கள்; அடுத்த முறை அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்’ என்கிறார்.
இது தொடர்கதையாக இருக்கிறதே தவிர, தீர்வு கிடைத்தபாடில்லை” என்கின்றனர்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட (கள்ளக்குறிச்சி) சத்துணவுத் திட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வசந்தாவிடம் கேட்டபோது, “முட்டைகள் அழுகியிருந்தால் அதை போட்டோ எடுத்து, அப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் கையெழுத்துப் பெற்று அனுப்பினால் மாற்று முட்டை வழங்கப்படும், முட்டை அளவுக் குறித்தும் அதே போன்று எடுத்து அனுப்பினால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்.
முற்றிலுமாக அழுகிய முட்டையை விநியோகித்து விட முடியாது. ஆனாலும் சற்று பழசான அழுகிய நிலையை எட்டக் கூடிய நிலையில் உள்ள முட்டையை கலந்து கட்டி அடிக்கலாம். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ‘ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டை அளித்தால், நமக்கு கிடைத்த இந்த எளிய வேலையும் நம்மை விட்டுப் போய் விடுமே!’ என்று சத்துணவு அமைப்பாளர்கள் அஞ்சுகின்றனர். அந்த அச்சமே இவர்களுக்கு சாதகமாக போய்விடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT