Last Updated : 27 Jun, 2023 11:49 AM

1  

Published : 27 Jun 2023 11:49 AM
Last Updated : 27 Jun 2023 11:49 AM

வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தில் காலையில் காய்கறி சந்தை... நண்பகல் முதல் மது பார்!

பெரிய பெயர்ப் பலகையுடன் பேருந்து நிலையம் என அடையாளப்படுத்தினாலும், பேருந்துகள் வராததால், சரக்கு வாகனம் நிறுத்தும் இடமாக மாறிப்போன வேப்பனப்பள்ளி புதிய பேருந்து நிலையம்.

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி புதிய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராததால், காலையில் தற்காலிக காய்கறிகள் சந்தையாகவும், நண்பகல் முதல் இரவு வரை மது அருந்தும் பாராகவும் மாறியுள்ளது. இதனால், பயணிகள் வெயிலுக்கும், மழைக்கும் திறந்தவெளியில் காத்திருக்கும் அவலம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் வேப்பனப்பள்ளி உள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் தீர்த்தம், நேரலகிரி, சென்னசந்திரம், நடுச்சாலை, பில்லனக்குப்பம், குருபரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்கள் அதிக அளவில் உள்ளன.

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதியாக இக்கிராமங்கள் உள்ளன. மேலும், இக்கிராமப் பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு வேப்பனப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர், சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதி மக்களும் வேப்பனப்பள்ளிக்கு பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேப்பனப்பள்ளியின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இங்கு பயணிகளின் வசதிக்காக இருக்கை, தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வராமல் சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன.

இதனால், பேருந்து நிலையம் கட்டியும் மக்களுக்குப் பயனில்லாத நிலையே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்ல இதுவரை நடவடிக்கை எடுக்காததால், காலையில் காய்கறி சந்தையும் நண்பகல் முதல் இரவு வரை மது பாராகவும் மாறியுள்ளது.

இதுதொடர்பாக வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த பிரதீப்குமார் கூறியதாவது: வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தில் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை தற்காலிக காய்கறி சந்தையாகவும், நண்பகல் 12 மணி முதல் இரவு வரை மது அருந்தும் பாராகவும் மாறியுள்ளது.

இதனால், பேருந்துக்குக் காத்திருக்கும் பயணிகள் வெயிலுக்கும், மழைக்கும் வழக்கம்போல திறந்தவெளியில் நிற்கின்றனர். இதனால், இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதைத் தடுக்க புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மக்கள் அதிகம் உள்ள பகுதியில் அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அலட்சியம் காட்டுவது நாட்டின் அடிப்படை வளர்ச்சியைச் சீர்குலைக்கும். இதை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x