Published : 27 Jun 2023 04:18 AM
Last Updated : 27 Jun 2023 04:18 AM

மாணவ, மாணவிகள் கல்வியின் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் - முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட ‘சிற்பி’ திட்டத்தின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இத்திட்டத்தில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் பிரியா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர்.

சென்னை: கல்வி மூலம் பகுத்தறிவு, சுயமரியாதை, அறிவியல் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று `சிற்பி' திட்ட நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை காவல்துறை சார்பில் நடைபெற்ற `சிற்பி' திட்ட நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிற்பி திட்டத்தில் பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார். மேலும், சிற்பி கீதம் என்ற சிற்பி திட்ட மாணவ, மாணவியருக்கான பாடலையும் வெளியிட்டார்.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லோருக்குமான இந்தியாவை, சமத்துவ இந்தியாவை பேணிக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு, நாட்டின் எதிர்காலமான உங்கள் கையில் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் படிப்பில் முதலிடம் எடுக்க வைக்கின்ற மாதிரி, ஒழுக்கத்திலும், பொறுப்பிலும், முதன்மையானவர்களாக ஆக்குகின்ற திட்டம்தான் இந்த `சிற்பி திட்டம்'. இத்திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இத்திட்டத்தில், 2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் சிறந்த பொறுப்புள்ள சீர்மிகு சிற்பிகளாக உருவாகியுள்ளீர்கள். சிற்பிதிட்டத்தின் மூலம், உங்களுக்கு ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் – ஐபிஎஸ் போன்ற பயிற்சிகளைப்போல், மிக சிறு வயதிலேயே பயிற்சியை அரசுவழங்கியுள்ளது.

சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களின் கவனக் குறைவு, போதிய குடும்பவருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை காரணமாக இருக்கிறது. இவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க இதுபோன்ற திட்டங்கள் கைகொடுக்கும்.

சுய ஆளுமை திறன்: போதை பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல், சுய ஆளுமை திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல், பொது மக்களோடு தொடர்பு, தேசிய விழாக்களை கொண்டாடுதல், தேசிய சின்னங்களுக்கு மரியாதை செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் - ஆகிய பண்புகளை சிறுவர்களிடையே உருவாக்க வேண்டும்.

ஏனென்றால், இன்றைய இளைஞர்களே, நாளைய எதிர்காலம். இளைஞர்களை சீர்படுத்தினாலே, எதிர்காலத்தை சீர்படுத்த முடியும். அப்படி உருவாகக்கூடிய இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை நிச்சயமாக செதுக்குவார்கள். தரமானகல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது.

மாணவர்களை தரமான ‘மனிதர்களாக’ உருவாக்குதே அரசின் கடமையாக நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக 'நான் முதல்வன்' திட்டம் தமிழக மாணவ மாணவியரை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கும் திட்டமாக அமைந்துள்ளது. 100 சதவீதம் படிப்பறிவை நாம் நிச்சயம் எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுப்பதுடன், இடையில் நிற்கும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக, கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். பள்ளியோடு கல்வியை நிறுத்தாமல் எல்லோரும் கல்லூரிகளுக்கு செல்லவேண்டும்.

நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். பகுத்தறிவு, சுயமரியாதை, அறிவியல் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். படிப்பை வைத்து சிந்தித்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துங்கள். படிப்பு மட்டும்தான் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து.

உங்கள் மற்ற கவலைகளை போக்குவதற்கு, மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய அரசு இருக்கிறது. நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. படிக்கின்ற காலத்தில் உங்களுக்கு வேறு எதிலும் கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது. எந்தவிதமான போதைப் பழக்கத்துக்கும் நீங்களும் அடிமையாகக் கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னைமேயர் ஆர்.பிரியா, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலர் பெ.அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வனாக இருக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளாகிய உங்களை பெரிதும் நேசிக்கிறார். முதல்வரின் கனவு நீங்கள் இந்த உலகத்துக்கே தலைமை தாங்க வேண்டும். நீங்கள் முதல்வனாக இருக்க வேண்டும். முதல்வர் உங்களை உயர்ந்த இடத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். முதல்வரின் கனவு நிறைவேற நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x