Published : 27 Jun 2023 05:36 AM
Last Updated : 27 Jun 2023 05:36 AM
சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை மூலம் வழங்குவது என்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தொகை வழங்கப்படாதது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், கடந்த மார்ச் 20-ம் தேதி குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
ஒரு கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும், இந்த திட்டத்துக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்படும், அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கான பயனாளிகளைத் தேர்வு செய்வது குறித்து, நிதி, சமூக நலன் மற்றும் வருவாய்த் துறைகள் சார்பில் அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்பப்பட்டன.
வரும் செப். 15-ம் தேதி தொடங்கப்படும் இந்த திட்டத்தில், நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர், சிறிய கடைகள், சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றுவோர் உள்ளிட்டோரும் பயனடைவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
இந்த திட்டம், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும். திட்டத்துக்கான நிதியை நிதித் துறை ஒதுக்கீடு செய்கிறது. பயனாளிகள் தேர்வை சமூகநலம், வருவாய்த் துறைகள் இணைந்து மேற்கொள்கின்றன. மகளிருக்கான உரிமைத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்தில் செலுத்தப்படும்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், உரிமைத்தொகையைப் பெறும் மகளிருக்கான தகுதிகள், அவர்களுக்கு எந்த வகையில் உதவித்தொகையை வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குடும்ப அட்டை விவரம், உதவியைப் பெறும் மகளிரின் வயது வரம்பு, பணி, ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கோருவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்க இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், விரைவில் விதிகள், வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT