Published : 27 Jun 2023 05:44 AM
Last Updated : 27 Jun 2023 05:44 AM
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலமுறை ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அ.மலர்விழி, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி, மாநில துணைத் தலைவர்கள் பே.பேயத்தேவன், ஆ.பெரியசாமி, மாநில செயலாளர்கள், எஸ்.கற்பகம், எஸ்.சுமதி, பெ.மகேஸ்வரி மற்றும் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.கலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், 40 ஆயிரத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் வரவேற்கத்தக்கது. பள்ளி சத்துணவு மையங்களில் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இதனால், இந்த திட்டத்தை வேறு நபர்களைக் கொண்டு செயல்படுத்துவது தேவையற்றது. எனவே, இந்த திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டோம். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். தமிழக முதல்வர் அல்லது அவரது தனிச் செயலாளர் நேரடியாக சத்துணவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT