Published : 27 Jun 2023 06:08 AM
Last Updated : 27 Jun 2023 06:08 AM

பதவிக்கு வந்து மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை - மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பேசியது என்ன? | முழு பின்னணி

மதுரை: ‘மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போகிறேன்’ என்று மதுரை தெற்கு தொகுதி (மதிமுக) எம்எல்ஏ பூமிநாதன் தெரிவித்தார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ ஆரம்பித்த காலம் முதல் அவருடன் அரசியல் பயணம் செய்பவர் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன். மதிமுகவை விட்டு பலர் பிரிந்து மாற்று கட்சிகளுக்கு சென்ற நிலையிலும் பூமிநாதன் மட்டும், வைகோவின் தீவிர ஆதரவாளராக அவருடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

அவரது விசுவாசத்தை பார்த்த வைகோ, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று தந்தார். பூமிநாதன் வெற்றிபெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.

இதை அவரே ஒரு முறை மாநகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்றபோது உருக்கமாக தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், ‘3 முறை எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். என்னை வெற்றிபெற வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் மாநகராட்சிக் கூட்டத்தை கூட தவறவிடக் கூடாது என்று பேச வந்திருக்கிறேன்’ என்று பேசினார்.

அவ்வாறு பேசியது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநகராட்சிக் கூட்டத்திலும் தனது தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை மதுரை மாநகராட்சிக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. வழக்கமாக தன்னுடைய தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் நிலவும் பிரச்சினைகளை பொறுமையாகவும், நிதானமாகவும் எடுத்துக் கூறும் பூமிநாதன் நேற்று ஆவேசமாக பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்யவே இந்த பதவிக்கு வந்தேன். மாநகராட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். நேரிலும் சந்தித்து அதிகாரிகளிடம் முறையிடுகிறேன். ஆனால், தொகுதி மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்குக்கூட தீர்வு காண முடியவில்லை.

தினமும் ஏராளமான பள்ளி குழந்தைகள் செல்லும் தெப்பக்குளம் சாலையை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். இதுவரை சீரமைக்கவில்லை. குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. பாதாள சாக்கடை பணிக்காகவும், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காகவும் தோண்டிய சாலைகளை சீரமைக்கவில்லை.

மாநகராட்சி அதிகாரிகள் மீது குறைகூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனென்றால் ஊழியர்களில் ஆரம்பித்து அலுவலர்கள் வரை மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மக்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தொகுதிக்குள் சென்றாலே மக்கள் எனது காரை சூழ்ந்துவிடுகிறார்கள்.

மக்களுக்கு உதவாத பதவியை பெருமைக்கு வைத்து என்ன பயன்? அதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம் என நினைக்கிறேன். ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் தரப் போகிறேன். அதற்கு முன்பாக வைகோவிடம் தகவல் தெரிவிக்கப் போகிறேன் என்று பேசினார்.

அவருக்கு பதிலளித்த மேயர் இந்திராணி, ‘உங்கள் வருத்தம் எங்களுக்குப் புரிகிறது. உடனடியாக உங்கள் தொகுதிக்குட்பட்ட வார்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் சொல்கிறேன்’ என்றார்.

பூமிநாதனை தொடர்ந்து துணை மேயர் நாகராஜனும் (மார்க்சிஸ்ட்), ‘பதவிக்கு வந்து இதுவரை என்னுடைய வார்டில் ஒரு பணியும் நடக்கவில்லை’ என்று கூறினார்.

மதிமுகவைச் சேர்ந்த பூமிநாதன், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜனின் இந்த பேச்சுக்களால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பூமிநாதன் மறுப்பு: இதற்கிடையே நேற்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ பூமிநாதன், ‘என்னுடைய வருத்தங்களைத்தான் மாநகராட்சி கூட்டத்தில் பதிவு செய்தேன். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறுமாதிரியாக வந்துவிட்டது. எம்எல்ஏ பதவியில் தொடர்ந்து நீடித்து மக்களுக்கு சேவையாற்றுவேன்’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x