Published : 24 Jul 2014 09:55 AM
Last Updated : 24 Jul 2014 09:55 AM

எஸ்ஐ-யை கொன்ற காதலி கைது

கிள்ளை காவல்நிலைய உதவி ஆய்வாளரை கழுத்தை அறுத்து கொன்றதாக காதலி கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட் டியை அடுத்த சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(31). இவர் கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இதனால் சிதம்பரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் பரங்கிப்பேட்டையில் நடந்த ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக தயாக்குப்பத்தைச் சேர்ந்த கலைமணி என்பவரின் மனைவி வனிதா கிள்ளை காவல் நிலையம் வந்தபோது எஸ்ஐ கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் விபரீத காதலாக மாறியது.

இதையடுத்து வனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கணேசனை கட்டாயப்படுத்தியுள் ளார். கணவனை விவாகரத்து செய்துவிட்டு வந்தால் மணம் முடிப்பதாக அவர் கூறினாராம். இதற்காக கணவனையும் மகனையும் விட்டு பிரிந்து இவர் மட்டும் தனியாக வேறொரு இடத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வனிதாவுக்கு தெரியாமல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கணேசனுக்கு ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்ததுள்ளது. விடுமுறை முடிந்து திங்கள்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பியவர் வழக்கம்போல் பணி முடிந்து நேற்றுமுன்தினம் தனது அறைக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த வனிதா மதுவை ஊற்றி குடிக்க வைத்துள்ளார். அதிக போதை ஏறிய நிலையில் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

இதனிடையே கணேசனின் மனைவி அவரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்ட போதும் போன் எடுக்காததால் சந்தேகமடைந்து சிதம்பரத்தில் உள்ள தனது உறவினருக்கு தகவல் அளித்து அவர் வீட்டில் சென்று பார்த்தபோது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கணேசன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் கணேசனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் வனிதா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வைத்து வனிதாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x