Published : 27 Jun 2023 06:18 AM
Last Updated : 27 Jun 2023 06:18 AM

ஏப்ரல், மே, ஜூனில் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் சிறப்பு முகாமில் வாழ்நாள் சான்றிதழ்களை அளிக்கலாம்

சென்னை: ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஓய்வூதியர்கள், ஜூலை மாதம் முதல் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு வாழ்நாள் சான்றிதழ்களை அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் எளிதில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் ஓய்வூதியர் நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த மே 31-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, சென்னை மாநகராட்சியில், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் எந்த மாதம் ஓய்வுபெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்.

அதேபோல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டையும் பெறுபவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வுபெற்ற மாதத்தை கணக்கில் கொண்டு வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கருணைத் தொகை ஒய்வூதியம் பெறுவோர் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தில் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். இவ்வாறு அளிக்க தவறினால், அடுத்துவரும் ஒரு மாதம் மட்டும் சலுகை அளிக்கப்பட்டு, பின்னர் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

இதற்கிடையே கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களில் நேரில் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க விரும்புவோர், ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, வாழ்நாள் சான்றிதழைஅளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஓய்வூதிய புத்தகம் (அசல்), வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டையுடன் விருப்பமுள்ளவர்கள் நேரில் வரலாம். இதர மாதங்களில் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டிய ஓய்வூதியர்கள் ஒய்வூதியப் பிரிவில் வாழ்நாள் சான்றிதழ்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x