Published : 27 Jun 2023 06:45 AM
Last Updated : 27 Jun 2023 06:45 AM
திருவள்ளூர்: புழல் பெண்கள் தனி சிறை அருகே நடந்து வரும் ஃப்ரீடம் பெட்ரோல் விற்பனை நிலைய கட்டுமான பணியை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
சென்னை, புழல் பெண்கள் தனி சிறையை சேர்ந்த 30 பெண் சிறைவாசிகள் செயல்படுத்தும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், புழல் பெண்கள் தனி சிறை அருகே ஃப்ரீடம் (Freedom) பெட்ரோல் விற்பனை நிலைய கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 1,170 ச.மீ. பரப்பளவில் ரூ.1.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் விற்பனை நிலைய கட்டுமானபணிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நிறைவடைய உள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் எக்ஸ்பி 95 உள்ளிட்ட விநியோக பிரிவுகளை கொண்டு, 20 கிலோ லிட்டர் பெட்ரோல், 20 கிலோ லிட்டர் எக்ஸ்பி 95 மற்றும் 40 கிலோ லிட்டர் டீசல் கொள்ளளவு கொண்டதாக அமைய உள்ள இந்த பெட்ரோல் விற்பனை நிலைய கட்டுமான பணியை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும் இப்பணியை திறம்படவும், துரிதமாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சிறைத் துறைத் துணைத் தலைவர் (தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத் துறைத் துணைத் தலைவர் முருகேசன், புழல், மத்திய சிறை-2 கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், இந்தியன் ஆயில் கார்பரேஷன் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும், இந்த ஃப்ரீடம் பெட்ரோல் விற்பனை நிலைய கட்டுமான பணியுடன் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை நிலையமான, சிறை சந்தையும் கட்டப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT