Last Updated : 27 Jun, 2023 10:01 AM

 

Published : 27 Jun 2023 10:01 AM
Last Updated : 27 Jun 2023 10:01 AM

ஊர்ந்து செல்லும் ஒதப்பை உயர்மட்ட பாலங்கள் பணி: 40 கி.மீ. சுற்றிவரும் அவலம் தீருமா? - எதிர்பார்ப்பில் 50 கிராம மக்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ளதுஒதப்பை கிராமம். இக்கிராமத்தில், திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. பழமையான, குறுகிய இந்த தரைப்பாலம், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் உபரி நீர், அதிகளவில் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் போதெல்லாம் தண்ணீரில் மூழ்குவது வழக்கமாக உள்ளது.

பூண்டி ஏரி உபரி நீர் திறக்கப்படும்போது,பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, வலுவிழந்துள்ள ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்படும். அவ்வாறு போக்குவரத்து தடைசெய்யப்படும் போதெல்லாம், ஒதப்பைமற்றும் அதனைச் சுற்றியுள்ள சீத்தஞ்சேரி, மயிலாப்பூர், பென்னலூர்பேட்டை, தேவேந்தவாக்கம், பெருஞ்சேரி, அனந்தேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்,மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருவள்ளூருக்கு சீத்தஞ்சேரி வனப்பகுதி வழியாக வெங்கல், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 30 கி.மீ., தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு செல்லும் சூழல் நிலவி வருகிறது.

அதே போல் நாகலாபுரம், சத்தியவேடு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகள், ஊத்துக்கோட்டை பகுதியிலிருந்து திருவள்ளூருக்கு வரும்பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பெரியபாளையம், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 40 கி.மீ., தூரத்துக்கு மேல் சுற்றிக் கொண்டு வரும்நிலை இருந்து வருகிறது.

இதையடுத்து ஒதப்பையில் திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வகையில், ரூ.12.10 கோடி மதிப்பில் ஒரு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.அதேபோல், மற்றொரு உயர் மட்ட பாலம், ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் வகையில், சுமார் ரூ.13.89 கோடி மதிப்பில் அமைக்கும் பணி, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.

அவ்வாறு தொடங்கப்பட்ட இவ்விரு உயர் மட்ட பாலங்கள் அமைக்கும் பணி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில், திருவள்ளூர் மாரக்கமாக செல்லும் வகையிலான பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்துவிட்டன. சாலைகளை இணைக்கும் பணிகள் மட்டும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.

ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் வகையிலான பாலம் அமைக்கும் பணியில், தூண்களை இணைக்கும் பணியில் சுமார் 40 சதவீத பணிகளே முடிந்துள்ளன.

மேலும் அவர்கள் கூறும்போது, ‘’வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பணிகளை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, பூண்டி உபரி நீர் வெள்ளமாக பெருக்கெடுக்கும் போது, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் இல்லாமல், திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் செல்லமுடியும். ஆகவே, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்" என கோரிக்கை வைக்கின்றனர்.

ஏ.ஜி.கண்ணன்

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன் கூறும்போது, ’’ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் ஊத்துக்கோட்டை வட்ட பகுதிகளை சேர்ந்த கணிசமானோர் திருவள்ளூருக்கு செல்ல திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையை பயன்படுத்துகின்றனர்.

இச்சாலையில், கட்டப்பட்டு வரும்உயர்மட்ட பாலப் பணி மிகவும் மெதுவாக நடைபெறுவதால் வடகிழக்கு பருவமழையின் போதும், நோயாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பணிக்குச் செல்வோர் குறித்த நேரத்தில் மருத்துவமனை, பணியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆகவே, பணியை துரிதப்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,’’ கரோனா பரவல், மழை உள்ளிட்டவை காரணமாக ஒதப்பையில் பாலங்கள் அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அப்பணி விரைவில் முடிவுறும் வகையில், தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x