Published : 25 Jul 2014 05:28 PM
Last Updated : 25 Jul 2014 05:28 PM
நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் வழங்கி வரும் ஊக்கத் தொகையை இனிமேல் வழங்கக் கூடாது என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெறுமாறு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் நீண்ட காலமாக வழங்கி வரும் ஊக்கத் தொகையை இனிமேல் வழங்கக் கூடாதென்றும், அப்படி ஊக்கத் தொகை வழங்கி கொள்முதல் செய்தால் மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, அந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்து வழங்கி வருகிறது. எனினும், தமிழகம் போன்ற சில மாநிலங்கள் மத்திய அரசு அறிவிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை விவசாயிகளை நிறைவு செய்யாது என்பதால், குறைந்த பட்ச விலையோடு கூடுதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயித்து ஊக்கத் தொகை அளித்து விவசாயிகளுக்கு உதவி வருகிறது.
இந்த நிலையில் அண்மையில் மத்திய உணவு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதில், "இந்திய உணவுக் கழகம் மூலம் சில மாநிலங்களில் உணவு தானியம் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தக் கொள்முதல் குறைந்த பட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருக்கக் கூடாது. உபரியாக இப்படிக் கொள்முதல் செய்யப்படும் மற்றும் வினியோகிக்கப்படும் உணவு தானியங்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது.
பரவலாக்கப்பட்ட கொள்முதல் அடிப்படையில் உணவு தானியங்களை வாங்கும் மாநிலங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையை விட கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்யக் கூடாது.
பொது விநியோகத் திட்டம் மற்றும் மக்கள் நலத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் கோதுமை, நெல்லுக்கு மட்டுமே மத்திய அரசு மானியம் வழங்கும். அதற்கு மேல் உபரியாகக் கொள்முதல் செய்யப்படும் தானியங்களுக்கு மானியம் வழங்காது.
இந்த விதிமுறை 2014-2015ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் துவங்கும் அக்டோபர் மாதத்திலிருந்தும் 2015-2016ஆம் ஆண்டுக்கான கோதுமை கொள்முதல் துவங்கும் அடுத்த ஏப்ரல் மாதத்திலிருந்தும் அமலுக்கு வருகிறது. இந்திய உணவுக் கழகம் இல்லாத மாநிலங்களில் அரசின் கொள்முதலுக்கும் இந்த விதி பொருந்தும்" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசின் விலையாக 1,340 ரூபாயும், மாநில அரசின் ஊக்கத் தொகையாக 70 ரூபாயும் சேர்த்து குவிண்டாலுக்கு 1,410 ரூபாய் என்றும், பொது ரக நெல்லுக்கு மத்திய அரசின் விலையாக 1,310 ரூபாயும், மாநில அரசு 50 ரூபாயும் சேர்த்து குவிண்டாலுக்கு 1,360 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையே போதவில்லை என்றும், தேர்தல் அறிக்கையில் நான் தெரிவித்திருப்பதைப் போல குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வேண்டுமென்றும் விவசாயிகள் போராடி வருகின்ற நேரத்தில் மத்திய அரசு இப்படியொரு அறிவிப்பினைச் செய்திருப்பது கண்டு தமிழக விவசாயப் பெருமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
தமிழக விவசாயிகளைப் பொறுத்தவரை, தொடர்ந்து மூன்றாண்டுகளாகக் குறுவை பொய்த்துப் போனது, தேவையான நிவாரண உதவி கிடைக்காதது, கூட்டுறவுக் கடன் வழங்குவதில் உள்ள பாரபட்சம், கடன் வசூலில் கெடுபிடிகள் என ஏராளமான பிரச்சினைகள் கழுத்தை நெரிப்பதால், இதுவரை காணாத இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பல பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கவும் இந்த முடிவு அறிவிக்கப்படுவதாக மத்திய அரசு காரணம் கூறுகிறது.
பொதுத் துறை வங்கிகளால் 1,129 முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டு; அதில் வாராக் கடன் மட்டுமே 54 ஆயிரம் கோடி ரூபாய் என்று இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வேளாண் மானியத்தில் கை வைக்கிறோம் என்பது பொருந்தாக் கூற்றாக உள்ளது.
மேலும் உணவுப் பயிர்ச் சாகுபடியைத் தவிர்த்து விட்டு, பல பயிர்ச் சாகுபடியை ஊக்குவித்ததால் சில நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவு விளைவுகளைக் கண்ட பிறகும், பல பயிர்ச் சாகுபடியை ஊக்குவிப்போம் என்பது, வேளாண்மையை அடிப்படைத் தொழிலாகக் கொண்டுள்ள நமது நாட்டில் அபாயகரமான விளைவுகளையே ஏற்படுத்தி விடும் என்பதை உணர வேண்டும்.
முறையாக உணவுப் பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்தி விட்டு, அதற்கு அடுத்த கட்டமாக பல பயிர்ச் சாகுபடியை ஊக்குவிப்பதே நாட்டுக்கு நன்மை தரும் அணுகுமுறையாகும். வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், உற்பத்தி செலவு கூடுதலாகிக் கொண்டே போகின்ற நிலையில், விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மாநில அரசின் சார்பில் நெல் கொள்முதல் விலை குறித்தும், மானியம் திரும்பப் பெறுவது குறித்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழக முதலமைச்சர் தொடர்ந்து ஊக்கத் தொகை வழங்குவார் என்றும், இதனால் ஏற்படும் இழப்பை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிப்பார் என்று நம்பலாம் என்றும் ஒரு நாளிதழ் முதல் அமைச்சருக்கு ஆதரவாக எழுதியுள்ளது.
ஆனால் தமிழக அரசு இதுவரை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான இந்தப் பிரச்சினையில் மாநில அரசின் நிலைப்பாட்டைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளது.
அதே நேரத்தில், மத்திய அரசு இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்து விவசாயிகளின் வேதனைகளைப் பன்மடங்கு பெருக்கி, அவர்களுடைய வெறுப்பைத் தேடிக் கொள்ளாமல், அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஏற்கனவே பல முனைகளிலும் விவசாயிகள் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த இக்கட்டான நேரத்தில் மேலும் அவர்கள் தலையில் இப்படியொரு சுமையை ஏற்றிடக் கூடாது என்று தெரிவிக்க விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT